படுகொலையான யாழ். பல்கலை மாணவர்களுக்காக ஆறு சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆஜர்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுப் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸாரினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் ஐவரையும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிமன்ற பதில் நீதவான் இளங்கோவன் இன்று உத்தரவிட்டார்.

குறித்த சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டீ.வி கமராக்களின் பதிவுகளை கொழும்பு பல்கலைக்கழக தகவல் பீடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் பலியாகிய மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களிடமும் வாக்குமூலம் பெறுவதற்கு தினங்களை ஒதுக்கித்தருமாறு நீதிமன்றிடம் CID யினர் கோரிக்கையினை முன்வைத்தனர்.

இதன்படி எதிர்வரும் 20ஆம், 29ஆம் திகதிகளில் இவர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளலாம் என யாழ்.நீதிமன்ற பதில் நீதவான் இளங்கோவன் அறிவித்தார்.

மேலும் இதன்போது மாணவர்கள் சார்பில், சிரேஷ்ட சட்டத்தரணி சிவலிங்கம், குருபரன், வடமாகாணசபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான சயந்தன் உட்பட ஆறு சட்டத்தரணிகள் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தமை சுட்டிக் காட்டத்தக்கது.