கைதான கொள்ளைக் கும்பல் இன்று நீதிமன்றில்

வடக்கு மாகாணத்தின் பல்வேறு இடங்களிலும் கொள்ளை, வழிப்பறி, திருட்டில் ஈடுபட்டு வந்த நால்வர் அணியாக செயற்பட்டு வந்த கொள்ளைக் கும்பல் ஒன்றினைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

இரு கைக்குண்டுகளும், நான்கு கத்திகளும், 28 தங்க நகைகளும், ஆட்டோ ஒன்றும்,  மோட்டார்சைக்கிள் ஒன்றும், முகத்தை மூடி மறைக்கும் கறுப்புத் துணிகளும்   இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. 

நெடுங்கேணி, வீரபுரம், இளவாலை, கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் இருந்தே நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

2013 ஆம் ஆண்டு தொடக்கம் மாங்குளம், சிலாவத்துறை, ஓட்டுசுட்டான், அடம்பன், மன்னார், மாங்குளம், கனகராயன் குளம், புளியங்குளம், செட்டிக்குளம், வவுனியா ஆகிய இடங்களில் பொதுமக்களை  அச்சுறுத்தி வழிப்பறி, திருட்டுக்களில் இந்தக் கொள்ளைக் கும்பல் ஈடுபட்டிருந்ததாக பொலிஸார் கூறினர். 

வவுனியா, மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் ஆலோசனையில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஆர்.சிசிரகுமாரவின் வழிநடத்தலில் சட்ட அதிகாரத்தை பேணும் பிரிவு பொறுப்பதிகாரி உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.எஸ்.கே.ரட்ணாயக்கா மற்றும் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பிரசாத் ஆகியோரின் தலைமையிலான பொலிஸ் குழுவே குறித்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, குறித்த கைது தொடர்பில் சந்தேகநபர்களின் உறவினர்கள் வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததையடுத்து மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த சந்தேகநபர்கள் நால்வரும் இன்று வவுனியா நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.