ஆக்கிரமிப்பு

அன்னிய தேசம் ஒன்றிற்கு 
அகதியாய் துரத்தப்பட்டவன்... 

ஆட்சி மாற்றத்தை நல்லாட்சி என நம்பி
தாயகம் நோக்கி மீள்கிறேன்...

எல்லாம் மாறிப்போய்விட்டது...

சந்திக்குச் சந்தி சாராயக் கடைகள்...
வீதிக்கு வீதி அடிதடிக் குழுக்கள்...

கஞ்சாவாம் கலாசாரச் சீர்கேடாம்...

இரவுகளில் இயந்திரத் துப்பாக்கி நீட்டும்
அன்னியன் ஒருவனுக்கு நான் ஆவா இல்லை என 
அடையாள அட்டை காட்டி - அவன் கூறும்
விளங்காத மொழிகள் கேட்டு தலை சொறிந்து
நான் யோசித்தேன்......!

மாறி வந்து விட்டேனோ என்று
மீண்டும் அன்னிய தேசம் ஒன்றிற்கு..

இல்லை இல்லை என்தேசம் தான் மாற்றப்பட்டு விட்டது...
அன்னியப் படைகளால்...

ஆலமரத்து பிள்ளையார் சிலையைத் தேடினேன்...
அரச மரத்தின் கீழ் புத்தர் சிலை கிடந்தது...

கோயில்கள் தேவாலயங்களை காணவில்லை..
விகாரைகள் தூபிகள் தெரிந்தன...

வெள்ளைக்காரர்களிடம் வாங்கிய கடனில் 
அவர்கள் தேசம் அபிவிருத்தி அடைந்ததோ என்னவோ
எங்கள் தேசம் மாற்றப்பட்டு விட்டது...

அவர்கள் தேசமாய் 
தூபிகளும் சிலைகளும் கட்டி...

கலியுகன்