இப்படி ஒரு அழகு நிலாவை நீங்கள் உங்கள் வாழ்நாளில் பார்த்ததுண்டா? (Video)

முன்பெல்லாம் நிலவைக் கூட்டி வந்து தான் அம்மாக்கள் பிள்ளைகளுக்கு உணவூட்டுவார்கள். அந்த உணவு ஊட்டல் இடைவேளைக்குள் எத்தினை நிலவுப்பாடல்கள்? எத்தினை நிலவுக்கதைகள்? சொல்லியிருப்பார்கள். 

ராப் பாடல்கள், பொப் பாடல்கள், குத்துப்பாடல்கள் என்று காதைக்கிழிக்கும் இன்றைய கலியுகத்திலும் கூட, இப்போதும் எங்கோ ஓர் மூலையில் யாரோ ஓரிருவது வாய்கள் அம்மாக்கள் சொல்லித்தந்த நிலவுப்பாடல்களை முணுமுணுப்பது இந்தப்பெரிய இரைச்சல்களுக்கு -  சத்தங்களுக்கு மத்தியிலும் சுகமாய் வந்து காதுகளில் சுருதி மீட்குது. 

அந்தப் பாடல்களுக்கு குற்றுயிரும் குலையுமாய் இப்பொழுதும் ஜீவன்கள் உண்டு. ஆனால் இன்றைய தலைமுறைகள் அதனை மீட்டெடுக்கத் தயாரில்லை. இல்லை இல்லவே இல்லை… தங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க நவநாகரிக அம்மாக்கள் தான் தயாரில்லை.     

இனி எக்காலமும் அப்படியொரு பசுமரத்தாணி போன்ற காலங்கள் திரும்பி வந்துவிடப்போவதில்லை. இப்போதெல்லாம் அந்தி சாய்ந்து 6.00 மணி ஆனாலே வீடுகளுக்குள் அடைந்து விடும் நவநாகரிக அம்மாக்கள், தொலைக்காட்சிப் பெட்டி சத்தத்தை காது ஜவ்வு கிழிய முடுக்கி விட்டு சின்னத்திரை தொடர் நாடக நடிகைகளோடு தாங்களும் சேர்ந்தே விசும்பி விம்மி வம்மி வெடித்துக் குமுறி அழுது ஒப்பாரி வைத்து விடுகின்றார்கள். ‘என்ன இது கருமம்… நடப்பது இழவு வீடா?’ எதுவுமே புரியாமல் குழந்தைகள் பேந்தப் பேந்த முழிக்க ஆரம்பித்து விடுகின்றார்கள். 

பால் போல ஒளி பாய்ச்சி, முற்றத்தை பளிச் என்று வைத்திருக்கும் நிலவைக் கை காட்டி, அதன் விசால வானத்தை கற்பனைக் கதைகளுக்குள் கஸ்டப்பட்டு அடக்கி, அண்டம் - பிரபஞ்சம் என்று பாட்டி தாத்தாக்கள் சொன்ன ‘மூளைக்கு வேலை கொடுத்த கதைகள்’ நூறு நூறு!!! மெய்யாலும்… உடுத்தொகுதியைக் காட்டி, இன்று எத்தினை பேர் தான் உங்கள் வீட்டு முற்றத்தில் உங்கள் குழந்தைகளை இருத்தி பாடம் நடத்துகிறீர்கள்? சொல்லுங்கள். 

நவீன மயமாக்கல் எனும் இயந்திர வாழ்க்கை உங்களை மூழ்கடித்திருக்கும். அல்லது கட்டடக்காடு நிலவுக்காட்சியை விழுங்கியிருக்கும். இதெல்லாம் கதை கதையாய் காரணங்களாம். 

கூட்டை உடைத்து வெளியே வராமல் விட்டிருந்தால் அழகான வண்ணத்துப்பூச்சிகளை நாங்கள் பார்த்துப் பரவசம் கொண்டிருக்க முடியாது. அதுபோலவே நீங்கள் அடைந்து கிடக்கும் வீட்டைத் தாண்டி வெளியே வராமல் விட்டால் உங்களுக்கே வானமே கிடையாது உறவுகளே!

கவனிக்குக: பேச்சு வழக்கில் ‘மூளைக்கு வேலை கொடுத்த கதைகள்’ என்பது சிந்தனையைத் தூண்டும் கதைகள் என்று பொருள்படும். 

செய்திக்குறிப்பு: இந்த நிலவுக்காட்சி 15.11.2016 செவ்வாய்க்கிழமை அன்று இரவு 6.53 மணியிலிருந்து 7.14 வரையான நேர காலத்துக்குள் யாழ்ப்பாணம் வல்வைவெளியை அண்மித்த பிரதேசத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது. 

சுமார் எழுபது வருடங்களுக்கு பின்னர் கண் புலக்காட்சிக்கு உட்பட்ட ‘சுப்பர் மூன்’ (பூமிக்கு அருகே சந்திர கிரகம் நெருங்கி வரும் போது வழமையான தோற்றத்தை விடவும் பெரிதாக காட்சி தருவதே ‘சுப்பர் மூன்’ என்று சொல்லப்படுகின்றது) நேற்று செவ்வாய்க்கிழமையும் நேற்று முன்தினம் திங்கள் கிழமையும் இலங்கையின் பல பகுதிகளிலும் தென்பட்டது. 

இலங்கையைப் போன்று பல நாடுகளிலும் இம்முறை 14 மடங்கு பெரிதாக தென்பட்ட ‘சுப்பர் மூன்’ காட்சிகளை விதம் விதமாக காணொளி மற்றும் ஒளிப்படமாக பதிவுசெய்து சமுக வலைப்பதிவர்கள் உலகம் முழுவதும் பரப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி: newsetv