அதி வேகமாகப் பேரூந்ததைச் செலுத்திய கொலைகாரச் சாரதி!! மாணவி உட்பட 3 பேர் படுகாயம்

வீதியால் வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி ஆகியவற்றை மோதி தள்ளியதனால் 5 வயது சிறுமி உட்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அத்துடன் வீதியோரத்தில் இருந்த வங்கி ஒன்றின் பெயர் பலகையையும், குறித்த வங்கியின்  ATM இயந்திர பகுதியையும் உடைத்து தள்ளியுள்ளது.

குறித்த விபத்துச் சம்பவம் பலாலி வீதியில் திருநெல்வேலி சந்திக்கு அருகில் இன்று புதன்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து தெரியவருவதாவது,

வசாவிளான்- யாழ்ப்பாணம் இடையில் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பயணிகள் பேருந்து மிகை வேகத்தில் வீதியில் பயணித்துள்ளதுடன், வீதி ஒழுங்கை மீறி முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற வேளை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் எதிரே வந்த முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியதுடன், வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியோரத்தில் உள்ள வங்கிக் கட்டிட தொகுதிக்குள் நுழைந்து பெயர் பலகை மற்றும்  ATM இயந்திரம் உள்ள அறை ஆகியவற்றை உடைத்து நின்றுள்ளது.

இதில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 5 வயது சிறுமி உட்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மேலும் சாரதி பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.