தேவாவுக்கும் தவாவுக்கும் தெறிப்பு அம்பலத்துக்கு

ஈபிடிபி கட்சியின் செயலாளர் நாயகமான டக்ளஸ் தேவானந்தாவுக்கும், வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசாவுக்கும் இடையில் நிலவி வந்த பனிப்போர் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. 

வடமாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து சி. தவராசாவை நீக்கி விட்டு அந்த இடத்துக்கு கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வை. தவநாதனை நியமிக்கவும். எனக் கோரும் கடிதம் ஒன்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரான அமைச்சர் மஹிந்த அமரவீர, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேக்கு அனுப்பியுள்ளார்.       

குறித்த கடிதத்தின் பிரதிகள் வடமாகாண முதலமைச்சர், சீ.வீ .கே சிவஞானம், சி. தவராஜா, வை. தவநாதன் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

குறித்த கடிதத்தில் முக்கியமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்று ஈ.பி.டி.பி. 

அதன் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா. வடமாகாண எதிர்க் கட்சித்தலைவர் மாற்றம் தொடர்பில் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் இருந்து ஈ.பி.டி.பி யின் சார்பில் எமது கூட்டமைப்பின் சார்பில் தெரிவான சி. தவராசா எதிர்க் கடசித் தலைவராக இருந்து விட்டார். 

சுழற்சி முறையில் அப்பதவியை எமது கட்சியைச் சேர்ந்த கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர் வை. தவநாதனுக்கு வழங்க நடவடிக்கை எடுங்கள். என  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் வடமாகாண எதிர்க் கட்சித் தலைவர் சி. தவராசா கருத்து தெரிவிக்கையில்,   

மாகாண சபைக்கு எதிர்க் கட்சித் தலைவர் என்கிற சட்ட ரீதியிலான பதவிநிலை ஏதுமில்லை. சம்பிரதாயபூர்வமான பதவி அந்தஸ்தே உண்டு. அதை யாருக்கு வழங்குவது என்று தீர்மானிப்பவர் அவைத்தலைவரன்றி ஆளுநர் அல்ல. விடயங்களை பரிசீலித்து ஏனைய எதிர்க்கட்சித் தலைவர்களது கருத்துக்களையும் உள்வாங்கி அவைத் தலைவரே முடிவெடுப்பார் என்றார்.  

இது தொடர்பில் அண்மைய ஊடகவியலாளர் சந்திப்பில் டக்ளஸ் தேவானந்தாவிடம் கேட்கப்பட்ட போது, 

வீட்டுக்கு வீடு வாசல்படி என்று கூறிய அவர், மற்றைய இயக்கங்கள் செய்யிற மாதிரி உள்ளுக்குள்ள பிரச்சினை என்றால் சுட்டுப் போடுவது அல்ல. தவ்ராசா ஒதுங்கிப் போகிறாரா அல்லது, கட்சி ஒதுக்கி விடுகிறதா என்பதனை நீங்கள் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். என்றார். 

ஈ.பி.டி.பி கட்சியின் யாழ். கிளிநொச்சி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  சந்திரகுமார் ஏற்கனவே கட்சியை விட்டு சென்றுள்ள நிலையில், வடமாகாண எதிர்க் கட்சித் தலைவர் சி. தவராசாவுடனான முறுகல் நிலை உச்சத்தை எட்டியுள்ள சூழ்நிலை அரசியல் அவதானிப்பாளர்களால் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருகிறது.

உட் கட்சி முரண்பாடு காரணமாக கட்சியின் முக்கிய ஆளுமைகள் இவ்வாறு வெளியேறிச் செல்வது கட்சி  பலவீனப்பட்டுள்ளது என்பதையே காட்டுகின்றது.