மாதகல் பகுதியில் இருந்து 7 கிலோ தங்கம் கடத்திய பெண் சாவகச்சேரிப் பகுதியில் வைத்துக் கைது

யாழ்.சாவகச்சேரி- சங்கத்தானை பகுதியில் வைத்து 7 கிலோ தங்கக் கட்டிகள் மற்றும் ஒருதொகை வெளிநாட்டு பணத்துடன்; பெண் ஒருவரை  யாழ். பொலிஸ் குற்றப்புலானாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குறித்த தங்கம் யாழ்.குடாநாட்டின் ஊடாக இந்தியா கொண்டு செல்லப்படவிருந்த நிலையிலேயே தங்கம் மற்றும் பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம்- மாதகல் பகுதியில் உள்ள பிரபல வெதுப்பக உரிமையாளர் ஒருவரின் மனைவியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி- சங்கத்தானை பகுதியில் வான் ஒன்றில் தங்கம் கடத்தப்படுவது தொடர்பாக குற்றப் புலனாய்வுத்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து நடத்தப்பட்ட சோதனையின் போதே மேற்படி தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேற்படி தங்கம் சாவகச்சேரி, சங்கத்தானை பகுதியிலிருந்து மாதகல் கொண்டு செல்லப்பட்டு மாதகல் பகுதியிலிருந்து கடல் வழியாக இந்தியா கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தமை விசாரணைகள் ஊடாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.

கைப்பற்றப்பட்ட தங்கத்தில் 100 கிராம் அளவிலான 70 தங்க கட்டிகள், 7 அமெரிக்கன் டொலர்கள், 100 கனேடியன் டொலர்கள், 1000 இந்தியன் ரூபாய்கள், 84 ஆயிரம் இலங்கை பணம் ஆகியன இருந்ததாக பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.

குறித்த கைது சம்பவம் இன்றைய தினம் அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.