தரவரிசையில் முன்னேறிய விராட் கோஹ்லி: சறுக்கிய ஆரோன் பிஞ்ச்

ஐ.சி.சி., 20 ஓவர் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோஹ்லி முன்னேற்றம் கண்டுள்ளார்.

அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று இருபது ஓவர் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

இந்த தொடரில் மூன்று ஆட்டங்களிலும் முறையே 90* ரன், 59* ரன், 50 ரன்கள் வீதம் எடுத்து அவுஸ்திரேலியாவை சிதறடித்த இந்திய துணை தலைவர் விராட் கோஹ்லி ஆட்டநாயகனாக தேரிவு செய்யப்பட்டார்.

இரு நாடுகள் இடையிலான 20 ஓவர் தொடர் ஒன்றில் மூன்று அரைசதங்கள் கண்ட ஒரே வீரர் என்ற வரலாற்று சாதனையையும் கோஹ்லி படைத்துள்ளார்.

இந்நிலையில், சர்வதேச போட்டிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் இருபது ஓவர் போட்டிக்கான தரவரிசையில் அவுஸ்திரேலிய அணியின் ஆரோன் பிஞ்ச்-ஐ பின்னுக்குத் தள்ளி இந்திய அணியின் விராட் கோஹ்லி 892 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஆரோன் பிஞ்ச் 868 புள்ளிகளுடன் இரண்டாது இடத்தில் உள்ளார்.

வங்கதேச அணியின் ஹால்ஸ் 3-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா அணியின் டூ பிளிஸ்சிஸ் 4-வது இடத்திலும் உள்ளனர்.

முதல் 10 இடங்களுக்குள் இந்திய அணியை சேர்ந்த வேறு யாரும் இடம்பெறவில்லை.

சுரேஷ் ரெய்னா 13-வது இடத்திலும், ரோகித் சர்மா 16-வது இடத்திலும், யுவராஜ் சிங் 20-வது இடத்திலும் உள்ளனர்.

முன்னதாக, அவுஸ்திரேலிய அணியை ஒயிட் வாஷ் செய்ததை அடுத்து டி20 போட்டிக்கான தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.