பிடிவாதமே எனது வெற்றியின் ரகசியம்: காஜல் அகர்வால்

காஜல் அகர்வால் நடித்து கடந்த வருடம் மாரி, பாயும் புலி ஆகிய படங்கள் வெளிவந்தன. தெலுங்கிலும் ஒரு படத்தில் நடித்திருந்தார். தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் பிரம்மோற்சவம் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

கவலை வேண்டாம் என்ற படமும் கைவசம் உள்ளது. இந்தியிலும் ஒரு படத்தில் நடிக்கிறார். காஜல் அகர்வால் அளித்த பேட்டி வருமாறு:-

ஒவ்வொருவரும் வாழ்க்கையில் சவுகரியமாக இருக்கவே விருப்பப்படுவார்கள். தன்னைப்பற்றியே சிந்திக்கவும் செய்வார்கள். ஆனால், நான் அதில் மாறுபட்டு இருக்கிறேன். எப்போதும் என்னை சுற்றி இருக்கும் விஷயங்களை பற்றியே சிந்திக்கிறேன். மற்றவர்களை பற்றியே யோசிக்கிறேன். தேவையில்லாதவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன்.

இது எனக்குள் இருக்கிற பெரிய பலகீனம் ஆகும்.என்னைப்பற்றியும், என் சினிமா வாழ்க்கை பற்றியும் மட்டுமே சிந்திக்க வேண்டும் என்று நான் நினைப்பது உண்டு. ஆனால், அப்படி இருக்க முடியவில்லை. சுற்றி இருப்பவர்களை பற்றியே என் மனம் யோசிக்கிறது. இதிலிருந்து விடுபட தொடர்ந்து முயற்சித்து வருகிறேன்.நான் ஏதேனும் ஒன்றை அடைய நினைத்தால், அது நிறைவேறும் வரை விடமாட்டேன்.

ஆசைப்பட்டதை முடித்த பிறகுதான், அடுத்தது பற்றி சிந்திப்பேன். இப்படிப்பட்ட ஒரு பிடிவாத குணம் எனக்குள் இருக்கிறது. இந்த பிடிவாதம் தான் என்னை உயரத்தில் கொண்டு வைத்திருக்கிறது. இதை என்னுடைய பெரிய பலமாக கருதுகிறேன்.நான் சினிமாவில் அறிமுகம் ஆனபோது நிறைய நல்ல கதைகள் வந்தன. ஆனால், மொழி தெரியாது இருந்தாலும் அவற்றில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

மொழி தெரியாவிட்டாலும் நிச்சயமாக இந்த படங்களில் என்னால் சிறப்பாக நடிக்க முடியும் என்ற பிடிவாதம் இருந்தது. அப்போது நடிக்க யோசித்திருந்தால் சினிமாவில் பின்தங்கியிருப்பேன். பிடிவாதம் காரணமாகவே அவற்றில் நடித்து முன்னுக்கு வந்துள்ளேன். ஒவ்வொரு படமும் எனக்கு புதிய அனுபவத்தை கொடுக்கிறது.

தமிழ், தெலுங்கில் நிறைய படங்களில் நடித்துவிட்டேன். அந்த படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது, திரைப்பட தொழில்நுட்பங்கள் பற்றி கற்றுக்கொண்டேன். என்னுடைய எதிர்கால சினிமா வாழ்க்கைக்கு அவை மிகவும் பயன்படும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.