யாழ் கட்டப்பிராயில் பெண்ணின் அதிரடியால் துரத்திப் பிடிக்கப்பட்ட கொள்ளையர்

 யாழ்.கட்டப்பிராய் பகுதியில் பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளையிட முயன்றவர்கள் வீட்டின் உரிமையாளரின் துணிச்சலினால் கொள்ளையர்கள் வசமாக மாட்டிய சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற மேற்படி சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்.கல்வியங்காடு- கட்டப்பிராய் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் வீட்டின் உரிமையாளர்கள் இல்லாத நிலையில் உட்புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த அலுமாரிகள், மேசை லாச்சிகளை உடைத்து தேடுதல் நடத்தி சுமார் 55ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுள்ளனர்.

இந்நிலையில் வீட்டின் உரிமையாளரான பெண் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் கதவை உடைத்து கொள்ளையர்கள் உட்புகுந்துள்ளதை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த பெண் கூச்சலிட்ட நிலையில் கொள்ளையர்கள் ஓடியுள்ளனர் இதனையடுத்து குறித்த பெண் தனது கைதொலைபேசியில் புகைப்படம் எடுத்துள்ளதுடன் கொள்ளையர்களில் ஒருவரின் கைபையையும்  பறித்துள்ளார்.

இதனையடுத்து அயலவர்கள் கூடிய நிலையில் குறித்த பெண் எடுத்த புகைப்படங்களை பார்த்து கொள்ளையர்களில் ஒருவர் அடையாளம் காணப்பட்டு அப்பகுதி இளைஞர்களால் பிடித்து வரப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்து வீட்டின் கிணற்றடியில் மதுபானமும் அருந்தியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த கொள்ளை தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.