வட்டுக்கோட்டை வைத்தியசாலை நோயாளர் அவதி!

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் நிலவும் வசதியீனங்களினாலும் சுகாதார சீர்கேட்டினாலும் அப்பிரதேசத் நோயாளர்கள் பணத்தைச் செலவு செய்து பல கி.மீ. தூரத்திலுள்ள யாழ்ப்பாணம், சங்கானை ஆகிய அரசாங்க வைத்தியசாலைகளை நாட வேண்டிய பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

இந்த நிலை குறித்துக் கவலை தெரிவித்துள்ள பொது அமைப்புக்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையில் வாழ்ந்து வரும் மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு மேற்படி வைத்தியசாலையில் நிலவும் சுகாதாதர சீர்கேடுகளையும் வசதியீனங்களையும் நிவர்த்தி செய்யு மாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கோரியுள்ளனர்.

வலி. மேற்கு பிரதேசத்தில் வசிக்கும் மக்களின் வசதி கருதி பல வருடங்களுக்கு முன்பு வட்டுக்கோட்டை அராலி வீதியில் அமைக்கப்பட்டுள்ள வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் அராலி, வட்டுக்கோட்டை, மூளாய், மாவடி, சித்தங்கேணி ஆகிய இடங்களில் வசிக்கும் நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இங்கு மகப்பேற்று வசதி உட்பட ஆண் பெண் நோயாளர்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கு விடுதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. விடுதியில் தங்கியிருக்கும் நோயாளர்களின் நலன் கருதி உணவு சமைப்பதற்கு வசதியாக சமையலறைகள் அமைக்கப்பட்டிருக்கின்ற போதும் சமையலறைகள் சேதமடைந்த நிலையில் இருப்பதால் நோயாளர்களுக்கு உணவு சமைத்துக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.