யாழ். பிரத்தியேக வகுப்புக்களுக்குத் தடை

வாரத்தில் வெள்ளிக்கிழமை மாலையிலும், ஞாயிறு காலை வேளைகளிலும் பிரத்தியேக வகுப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் தம்மிடம் தெரிவித்துள்ளதாக யாழ்.சின்மயா மி­ன் ஜாக்கிரத சைதன்ய சுவாமிகள் அறிவித்துள்ளார்.

யாழ்.இந்து மாமன்றத்தில் கடந்த 16 ஆம் திகதி சனிக்கிழமை சைவ நெறி பாடநூல்
தவறுகளைத் திருத்துவது தொடர்பான கலந்துரையாடல் கலாநிதி ஆறு திருமுருகன் தலைமையில் நடைபெற்றிருந்தது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றும்போது

யாழ்.மாவட்ட அறநெறிப் பாடசாலைகளை ஒழுங்காக செயற்பட வைப்பது தொடர்பிலும், மாணவர் வரவை அதிகரிப்பது தொடர்பிலும் அரச அதிபருக்கும் எமக்கும் இடையில் கடந்த வாரம் கலந்துரையாடல் இடம் பெற்றிருந்தது. இதன்போதே வெள்ளிக்கிழமை இந்துக்களின் புனித நாள். அன்று மாணவர்கள் ஆலயம் சென்று கூட்டு வழிபாடுகளில் ஈடுபட வேண்டும். 

சமயச் சொற் பொழிவுகளைக் கேட்க வேண்டும். சமய விழுமியங்களை வாழ்கையில் பின்பற்றி வழி காட்டவேண்டும். அவ்வாறே ஞாயிற்றுக்கிழமைகளில் காலைவேளை அற நெறிக்குச் சென்று சமய விழுமியங்களை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

இதற்கு வசதியாக வெள்ளி மாலையும், ஞாயிறு காலையும் பிரத்தியேக வகுப்புக்களை நிறுத்த நட வடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அரச அதிபரிடம் கேட்டிருந்தோம். அதனை ஏற்றுக்கொண்ட அரச அதிபர் இனிவரும் காலங்களில் மேற்படி கோரிக்கைகள் நடை முறைப்படுத்தப்படும் எனத் தெரிவித்திருந்ததாகக் கூறினார்.