யாழில் நகைச்சுவையாளராக மாறினார் வனவள பாதுகாப்பு பிரிவின் அதிகாரி

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஒவ்வொரு திணைக்களங்கள் சார்ந்த பிரச்சினைகள் அபிவிருத்தி குறித்த தேவைகள் தொடர்பான ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், வனவளபிரிவு தொடர்பான பிரச்சினைகள் அபிவிருத்தி குறித்த தேவைகள் தொடர்பாக பேசும் சந்தர்ப்பம் எழுந்த போது, 

வனவள பிரிவுக்கான பொறுப்பதிகாரியை சபையில் அழைத்த போது சபையில் அதிகாரி இருக்கவில்லை. இந்நிலையில் கோபமடைந்த முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வனவள பிரிவு தொடர்பாக அதிகளவு கேள்விகள் கேட்க வேண்டிய கட்டாயம் உள்ள நிலையில் மேற்படி துறைசார் அதிகாரி சபைக்கு வந்திருக்காமை மிகவும் கண்டிக்கத்தக்கது. என சபையில் சுட்டிக்காட்டியதுடன், குறித்த துறை சார்ந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில் மேற்படி வனவளதுறை சார்ந்த அதிகாரி சபையில் திடீரென தோன்றினார். இந்நிலையில் முதலமைச்சர் மேற்படி அதிகாரியிடம் உங்கள் திணைக்களம் சார்ந்த பிரச்சினைகள், அபிவிருத்தி தேவைகள் மற்றும் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பாக தெரியப்படுத்துங்கள் என கூறினார்.

இந்நிலையில் எந்தவிதமான தயார்ப்படுத்தல் மற்றும் தகவல்கள் இல்லாத நிலையில் சபைக்கு வந்திருந்த அதிகாரி முதலமைச்சரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாத நிலையில் இருந்தார். 

இதனால் சபையில் சிரிப்பொலி மேலிட்டது. இதனையடுத்து முதலமைச்சர் மரநடுகை திட்டங்கள் எதாவது செய்கிறீர்களா? என கேட்டதற்கு இந்த வருடம் 10 பாடசாலைகளை மர நடுகைக்காக தெரிவு செய்திருக்கின்றோம். என தட்டுதடுமாறி தெரிவித்தார். 

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் எதற்காக பாடசாலைகளை காடுகளாக மாற்றப் போகிறீர்களா? என கேள்வி எழுப்பிய நிலையில் மீண்டும் சபையில் சிரிப்பொலி மேலிட்டது.

இந்நிலையில் அடுத்த கூட்டத்தில் உங்கள் திணைக்களம் சார்ந்த விடயங்களை அறிக்கையிடுங்கள் என முதலமைச்சர் குறித்த அதிகாரியிடம் கேட்டுக்கொண்டார்.