கொடிகாமம் சந்திப் பகுதியில் பேருந்து சாரதி, நடத்துநர் கைகலப்பு

இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து சாரதி, நடத்துனருக்கும் மற்றும் தனியார் பேருந்து சாரதி, நடத்துனருக்கும் இடையில் ஏற்பட்ட கை கலப்பில் ஒருவர் படுகாயமடைந்ததுடன் இரு பேருந்துகளிலும் பயணித்த சுமார் 25 ற்கும் மேற்பட்ட பயணிகள் தொடர்ந்தும் பயணம் செய்ய முடியாது தவித்து நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இச் சம்பவம் நேற்று இரவு 7.30 மணியளவில் கொடிகாமம் சந்திப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

வவுனியாவிலிருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து கொடிகாமத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி பிரயாணமான தனியார் பேருந்திலுள்ள ஒரு சில பயணிகளை கொடிகாமம் சந்தியில் வைத்து அரச பேருந்தில் ஏற்றியதாலேயே மேற்படி கைகலப்பு ஏற்பட்டதாக பேருந்தில் பிரயாணம் செய்த பிரயாணி ஒருவர் தெரிவித்தார்.

தனியார் பேருந்து நடத்துனரே முதலில் அரச பேருந்து நடத்துனரை தாக்கியதாகவும் அதில் அவரது காதுப்பகுதி பலமாக தாக்கப்பட்டதோடு காதில் இருந்து இரத்தம் வடிந்ததாகவும் அவர் மேலும்  தெரிவித்தார்.

இது தொடர்பில் உடனடியாக கொடிகாமம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் கை கலப்பில் ஈடுபட்ட அனைவரையும் பொலிஸ் நிலையம் அழைத்து சென்றதோடு காயப்பட்ட அரச பேருந்து நடத்துனரை சாவகச்சேரி வைத்திய சாலையில் சேர்த்துள்ளனர்.

மேற்படி மோதல் சம்பவத்தினால் இரு பேருந்துகளிலும் பிரயாணம் செய்த சுமார் 25 ற்கும் மேற்பட்ட பயணிகள் உடனடியாக தமது பயணத்தை தொடர்ந்தும் மேற்கொள்ள முடியாமல் சிரமங்களை எதிர் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.