யாழில் போலி தொலைபேசி அழைப்புகள்! தொலைத் தொடர்பு ஆணைக்குழு அவதானம்!!

அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் வெற்றி பெற்றுள்ளதாக கூறி வரும் தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு பதில் வழங்காதிருக்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், வெளிநாட்டு தொலைபேசி இலக்கங்களில் இருந்து இவ்வாறான அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் கிடைக்கப் பெறுவதாக தெரிவித்து தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மக்களை திசை திருப்பி, பணம் சம்பாதிக்கும் மோசடி வழிமுறையாக இது இருக்கலாம் எனவும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு சந்தேகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, அவ்வாறான தொலைபேசி அழைப்புக்களை தடுப்பதற்கு விஷேட வேலைத்திட்டம் ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மோசடி தொடர்பாக நாட்டில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களையும்
அறிவுறுத்தி இருப்பதாகவும் அந்த ஆணைக்குழு கூறியுள்ளது.

இதனை தடுப்பதற்காக மக்களை அறிவுறுத்துவதற்காக சுவரோட்டி திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வெளிநாட்டு தொலைபேசி இலக்கங்களில் இருந்து வரும் அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு பதில் வழங்கும் போது மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும், சந்தேகம் ஏற்படின் 1900 என்ற இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.