யாழ், கொழும்பு செல்வதாக நினைத்து பரலோகத்துகத்துக்குச் செல்ல ரிக்கட் எடுக்கும் பயணிகள்

கடந்த 30 வருடங்களாக இடம்பெற்று வந்த கொடிய யுத்தம் பெருமளவு உயிர்ச் சேதத்துடன் முடிக்கப்பட்டு 6 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. யுத்தம் நடைபெற்று வந்த அந் நேரத்தில் பத்திரிகைகளில் வரும் செய்திகளில் பெரும்பாலனவை சண்டை நடைபெறும் பகுதிகளில் இடம்பெறும் பொதுமக்களின் உயிரிழப்புக்கள் தொடர்பானதே ஆகும்.

ஆனால் தற்போது பத்திரிகைச் செய்திகளில் வீதிகளில் பயணம் செய்யும் போது இடம்பெறும் விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் செய்திகளே தினமும் வந்துகொண்டிருக்கின்றன. குறித்த விபத்துக்கள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கிய காரணம் போக்குவரத்துப் பொலிசார், மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகளின் அசமந்தமே காரணமாக உள்ளது.

இவர்கள் சரியான முறையில் செயற்பட்டு வந்தால் பெருமளவான வாகன விபத்துக்களைக் கட்டுப்படுத்தி உயிரிழப்புக்களை நிறுத்த முடியும்.

தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதி இன்றி  இலங்கையின் முக்கிய வழித்தடங்களில் பயணிக்கும் பயணிகள் பேரூந்துகளைக் கட்டுப்படுத்துவதற்கு அவர்கள் எடுக்காத நடவடிக்கையால்  நேற்று இரவு அநியாயமாக ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதுடனம் பலரும் படுகாயங்களுக்கு உள்ளான சம்பவம் பூநகரிப்  பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வழித்தட அனுமதி இன்றி கொழும்பு நோக்கித் திருட்டுத்தனமாக பயணிகளுடன் மிக அதி வேகத்தில் சென்ற சிற்றிலிங் எனும் பேரூந்து பூநகரிப் பகுதியில் உழவு இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் உழவு இயந்திரத்தைச் செலுத்திச் சென்ற யாழ் தென்மராட்சி கச்சாய் பகுதியைச் சேர்ந்த சாரதி பரிதாபகரமாகப் பலியானார்.

இந்த விபத்துச்  சம்பவத்தில் உள்ள மிக வேதனையான  விடயம் என்னவெனின் விபத்து ஏற்பட்டவுடன் துாக்கி வீசி நிலத்தில் கிடந்த உழவு இயந்திரத்தின் சாரதியை யாருமே வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லாததுதான். அவர் இறந்தாரா, அல்லது காயத்துடன் கிடக்கின்றாரா என்பதைக்கூடக் பொருட்படுத்தாது  அவரைக் காப்பாற்ற அங்கு நின்றவர்கள் யாருமே முயற்சி செய்யவில்லை .

ஒரு காகம், குருவி  அல்லது மிருகம் காயப்பட்டால் அந்த இடத்தில் நிற்கும் இதே இனத்தைச்  சேர்ந்தவைகள் படும் பாட்டை நாங்கள் கண்ணுாடாப் பல தடவைகள் பார்த்திருக்கின்றோம். ஆனால் ஆறறிவு படைத்த நாங்கள் எமது உறவு காயப்பட்டு கிடக்கும் போது வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றது எவ்வளவு கொடுமையானது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

பேரூந்து மோதி விபத்துக்குள்ளானதும் பேரூந்து முதலாளி பேரூந்தில் உள்ள பயணிகளை அப்புறப்படுத்துவதிலேயே குறியாக இருந்ததாக அங்கு நின்ற பொதுமக்கள் தெரிவித்தனர். ஏனெனில் பேரூந்து பயணிகள் இல்லாது வெறுமனவே சொந்தத் தேவைகளுக்காக கொழும்பு சென்று கொண்டிருந்தது என போக்குக் காட்டி வழித்தட அனுமதி இல்லாததை மூடி மறைக்க முயன்றுள்ளார் பஸ் முதலாளி.

உழவு இயந்திரச் சாரதி உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்பதைக் கூட அவர் பொருட்படுத்தவில்லை. தனது பஸ் நடத்துனருக்கு கால் முறிந்தது கூட அவருக்கு கவலையளிக்கவில்லை. பேரூந்து தனியாகச் சென்றதாக காட்டவே அவர் பெரிதும் முயன்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு வழி அனுமதிப்பத்திரம் இல்லாத பேரூந்துகளில் மக்கள் ஏன் பிரயாணம் செய்கின்றார்கள்?

இதற்கான காரணம் பயணிகள் சேவையில் ஈடுபடும் பஸ்களின் ஆசனங்களை முற்பதி செய்யும் நிலையங்களே ஆகும். யாழ்ப்பாணத்தில் வரணி புக்கிங் சென்றர் என்ற நிலையம் யாழ் ஆஸ்பத்திரி வீதியில் காணப்படுகின்றது. மற்றும் கொழும்பில் வெள்ளவத்தைப் பகுதியில்  சாரதி ஆசனப் பதிவகம் , சிற்றிக் கொம்மிகேசன், மயுரி கொம்மினிகேசன் , மைசூர் புக்கிங் சென்றர், முத்து புக்கிங் சென்றர் கொட்டகென போன்ற இடங்களில் கொழும்பு -யாழ் பயணிகளுக்காக ஆசன முற்பதிவு இடம்பெறுகின்றது.

ஒரு பேரூந்து ஆசன முற்பதிவுக்கு  வழித்தட அனுமதி பெற்ற  பேரூந்து முதலாளிகள்  1300 ரூபா ரிக்கட்டுக்கு நுாறு ரூபாவை குறித்த நிலையங்களுக்கு கொடுக்கின்றார்கள். ஆனால் வழித்தட அனுமதி இல்லாத பேரூந்துகளை வைத்திருப்போர்   ஆசனப்பதிவுக்காக அந்த நிலையங்களுக்கு   ஒரு ஆசனத்திற்கு 1300 ரூபா ரிக்கட்டுக்கு 400 ரூபா கொடுப்பதாக அறிய முடிகின்றது.

யாழ் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள வரணி புக்கிங் சென்றருக்கு ஒரு அனுமதி இல்லாத பஸ்சிற்காக ஆட்களை சேர்த்து ஏற்றினால் 45 ஆசனங்களுக்கு மொத்தமாக 18 ஆயிரம் ரூபாவை ஒரு சில மணித்தியாலங்களில் பெற்றுவிடுவார்கள். இதனால் அவர்கள் அனுமதி பெறாத பஸ்களிலேயே பயணிகளை ஏற்றுவதில் குறியாக இருக்கின்றார்கள்.

தெரியாமல் செய்வது தவறு. தெரிந்து செய்வது தப்பு.... இந்த ஆசனப்பதிவு நிலையங்களைச் சேர்ந்தோர் பஸ்களின் தராதரம், பயணிகளின் பாதுகாப்பு என்பவற்றை சிறுதேனும் சிந்திக்காது மனிதாபிமானம் இன்றிச் செயற்பட்டு காசு சம்பாதிப்பதிலேயே குறியாக உள்ளார்கள்.

ஒரு பேரூந்து ஆசன முற்பதிவுக்கு  வழித்தட அனுமதி பெற்ற  பேரூந்து முதலாளிகள்  1300 ரூபா ரிக்கட்டுக்கு நுாறு ரூபாவை குறித்த நிலையங்களுக்கு கொடுக்கின்றார்கள். ஆனால் வழித்தட அனுமதி இல்லாத பேரூந்துகளை வைத்திருப்போர்   ஆசனப்பதிவுக்காக அந்த நிலையங்களுக்கு   ஒரு ஆசனத்திற்கு 1300 ரூபா ரிக்கட்டுக்கு 400 ரூபா கொடுப்பதாக அறிய முடிகின்றது.

யாழ் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள வரணி புக்கிங் சென்றருக்கு ஒரு அனுமதி இல்லாத பஸ்சிற்காக ஆட்களை சேர்த்து ஏற்றினால் 45 ஆசனங்களுக்கு மொத்தமாக 18 ஆயிரம் ரூபாவை ஒரு சில மணித்தியாலங்களில் பெற்றுவிடுவார்கள். இதனால் அவர்கள் அனுமதி பெறாத பஸ்களிலேயே பயணிகளை ஏற்றுவதில் குறியாக இருக்கின்றார்கள்.

தெரியாமல் செய்வது தவறு. தெரிந்து செய்வது தப்பு.... இந்த ஆசனப்பதிவு நிலையங்களைச் சேர்ந்தோர் பஸ்களின் தராதரம், பயணிகளின் பாதுகாப்பு என்பவற்றை சிறுதேனும் சிந்திக்காது மனிதாபிமானம் இன்றிச் செயற்பட்டு காசு சம்பாதிப்பதிலேயே குறியாக உள்ளார்கள்.

இதே நேரம் இலங்கையில் பயணிகள் பேரூந்து சேவை உள்ளிட்ட பல போக்குவரத்து சேவைகளைக் கட்டுப்படுத்தி அவைகளுக்கான வழித்தட அனுமதியைக் கொடுக்கும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவைச் சேர்ந்த அதிகாரிகளும் வழித்தட அனுமதி இல்லாத பேரூந்துகளை ஓடவிட்டு அந்தப் பேரூந்து முதலாளிகளிடம் இருந்து பெருமளவு பணத்தை லஞ்சமாகப் பெறுகின்றார்களா என சந்தேகிக்க வேண்டி உள்ளதாக பயணிகள் சிலர் சந்தேகம் தெரிவிக்கின்றனர். ஊடகங்களில் பஸ் இலக்கங்களுடன் அனுமதி பெறாத பஸ்கள் என செய்தி வந்து குறித்த அதிகாரிகள் அசன்டையீனமாக இருப்பதற்கு காரணம் என்ன? எனவும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இவ்வாறான பேரூந்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கும் அவர்களே பொறுப்புக் கூற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதே வேளை போக்குவரத்துப் பொலிசாரின் நடவடிக்கைகளும் சொல்லும்படியாக இருக்காத காரணத்தாலேயே குறித்த பேரூந்துகள் தங்கள் விளையாட்டைக்காட்டுகின்றன.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணிகளை ஏற்றிக் கொண்டு பிரயாணம் செய்யும் வழித்தட அனுமதி இல்லாத பேரூந்துகளை ஒரு சில பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிசார் கண்டும் காணாததுமாக விட்டுவிட்டு அப் பேரூந்து முதலாளிகளிடம் பெருமளவு பணத்தை லஞ்சமாகப் பெற்றுவருவதாக மக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

வழித்தட அனுமதி இல்லாத பேரூந்துகள் கொழும்பு செல்லும் போது கண்டிவீதியால் பயணிப்பதில்லை. ஏனெனில் பளைப்பகுதிப் பொலிசார் குறித்த பேரூந்துகளுக்கு வில்லன்களாக இருக்கின்றார்கள். இவ்வாறான பேரூந்தகளை அவர்கள் செல்ல அனுமதிப்பதில்லை. அவற்றைப் பிடித்து வைத்து நீதிமன்றத்தில் நிறுத்துகின்றார்கள். ஆனால் சாவகச்சேரிப் பொலிசாரின் நிலை வேறு விதமாக இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

சாவகச்சேரிப் பகுதியைச் சேர்ந்த பங்கஜன் எனும் பிகேபஸ் முதலாளி சாவகச்சேரிப் பொலிசாரை தனது கைப்பாவை போல் பயன்படுத்தி தனது காரியங்களை கச்சிதமாக முடித்து வருகின்றார். பங்கஜன் தனது காரை சாவகச்சேரிப் போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரிக்கு கொடுத்தும் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்திற்கு தளபாட வசதி உட்பட பல வசதிகளைச் செய்து கொடுத்தும் பொலிசாரை தனது கைக்குள் வைத்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் சாவகச்சேரிப் பகுதியில் நடக்கும் பல சம்பவங்களுக்கு பொலிசாரை நாடும் மக்களிடம் பேரம் பேசி இவ்வளவு தந்தால் நான் எல்லாவற்றையும் முடித்துவிடுவேன் என ஆயிரக்கணக்கான காசுகளைப் பெற்று அதில் சிறுபகுதியைப் பொலிசாருக்கு கொடுத்துவிட்டு மிகுதியைத் தனக்கு எடுத்துக் கொள்வதும் வழமை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவரது செல்வாக்குக் காரணமாக  பூநகரிப் பாதையால் செல்லும் பஸ்களை நாவற்குழி மற்றும் தனங்கிளப்புப் பகுதிகளில் பொலிசார் மறிக்காது கண்டும் காணாததுமாக விட்டுவிடுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அத்துடன்  அனுமதி பெறாத பஸ்கள் செல்லும் போது, ஏனைய பகுதிகளில் வழி வழியாக நிற்கும் சாதாரண போக்குவரத்துப் பொலிசாருக்கு இவர்கள் கொடுத்துக் கொடுத்து செல்வதற்காக பஸ் சாரதியிடம் முதலாளி 100 ரூபா தாள்கள் அடங்கிய சுமார் 3000 ஆயிரம் ரூபாக்களை கொடுத்துவிடுவாராம்.

சிலவேளை இவ்வாறான பஸ்களைப் பிடிப்பதற்காக விசேட அனுமதி பெற்ற பொலிசார் வந்தாலும் இவர்களிடம் இலஞ்சம் வாங்கும் போக்குவரத்துப் பொலிசாரே கூறி பாதை மாற்றி விடுவதாகவும் தெரியவருகின்றது.

அத்துடன்  இவ்வாறான பஸ்களை  நீதியான முறையில் செயற்படும் போக்குவரத்துப் பொலிசார்  பிடித்து நீதிமன்றில் ஒப்படைத்தாலும் இவர்களுக்கான அபராதமாக வெறும் பத்தாயிரம் ரூபா முதல் 30 ஆயிரம் ரூபா வரையுமே தண்டம் பெறப்படுகின்றது. இந்தப் பணம் குறித்த பஸ் முதலாளிகளின் ஒரு நாள் வருமானமாகும். ஆகவே அவர்கள் இந்தத் தண்டப் பணத்தை ஒரு பொருட்டாகவே மத்திக்காது மீண்டும் மீண்டும் சேவையில் ஈடுபட விடுகின்றனர், NA8697. ND8535. ND8105. ND7043. ND9995.  ND9999. ND0140. NA7827. 62-5236. NA7824 இலக்கம் கொண்ட பேரூந்துகளும் இவ்வாறே வழித்தட அனுமதி இல்லாது செயற்படுகின்றன.

இவர்களைக் கட்டுப்படுத்துவதில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என அனைத்துத் தரப்பாலும் சந்தேகக் கேள்விகள் தொடுக்கப்படுகின்றன. அனுமதி பெறாத பஸ் முதலாளிகளுக்கும் இந்த ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் இடையில் உள்ள தொடர்பு என்ன என்பதும் கண்டறியப்பட வேண்டியு ஒன்றாகும்.

யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படும் இவ்வாறான பேரூந்துகளை யாழ்பாணம் நாவற்குழிப் பாலத்தில் வைத்தே மடக்கிவிடமுடியும். ஆனால் அவ்வாறு செய்யாமல் சாவகச்சேரிப் பொலிசார் இருப்பது ஏன்?

 மிகவும் திறமையான  மக்களால் மதிக்கப்படும் நேர்மையான நீதிபதி ஒருவர் சாவகச்சேரி நீதிமன்றில் நீதிபதியாக உள்ளார். ஊடகங்கள் பொறுப்புணர்வுடனும் துணிச்சலுடனும் செயற்பட்டு ஜனநாயகத்தின் துாண்களில் ஒன்றாக இருக்க வேண்டும் என்று கூறியும் வருகின்றார். இவ்வாறானவர் அப்பகுதியில் இருக்கும் போதே குறித்த பேரூந்து முதலாளிகளின்  சட்டவிரோ செயற்பாடு தொடர்ந்து நடைபெற்று வருவதை எமது ஊடகம் பொறுப்புணர்வுடன் வெளிப்படுத்தியுள்ளது.

மக்களின் உயிர்களைப் பற்றி எந்தவித அக்கறையும் இல்லாது யமனின் முகவர்களாக மாறி பயணிகளையும் வழிப் போக்கர்களையும் கொலை செய்யும் இவ்வாறான பேரூந்து முதலாளிகளின் செயற்பாடுகளை அடக்கும் வரை எமது குரல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டு இருக்கும்.

குறித்த பேரூந்துகள் தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு பொதுமக்கள் முறைப்பாடு செய்ய விரும்பினால் கீழே உள்ள அதிகாரிக்கு தொடர்புகளை மேற்கொண்டு முறையிட முடியும்.

ENG M.A.P.HEMACHANDRA

TP.No :-  0094(011)2503608

 FAX   :-     0094(011)2503725