படுகாயமடைந்த சாவகச்சேரி பெண் சாவு

பூநகரி -முழங்காவில் பகுதியில் கடந்த 22ஆம் திகதி இரவு இடம்பெற்ற விபத்தில் படுகாயமுற்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த ஆறு பிள்ளைகளின் தாய் சிகிச்சை பயனளிக்காத நிலையில் நேற்று அதிகாலை மரணமடைந்துள்ளார்.

சாவகச்சேரி கட்டுக்காணியைச் சேந்தவரான வசந்தகுமார் திருவதனா (வயது 39) என்ற குடும்பப் பெண்ணே உயிரிழந்தவராவார்.

கடந்த 22ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் தனது மகளையும் தாயையும் ஏற்றிக்கொண்டு உறவினர்களுடைய நிகழ்வு ஒன்றுக்குச் சென்றுவிட்டு தாய்வீட்டுக்கு திரும்பியுள்ளார். இந்த நிலையில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் வண்டியில் தனது 12 வயது மகனையும் ஏற்றிவிட்டு பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

பஸ் வேகமாக செல்ல இவரும் யானைக் காடென்ற பயத்தில் பஸ் வண்டியின் பின்னால் மகனையும் கவனிக்கும் வகையில் மோட்டார் சைக்கிளை வேகமாகச் செலுத்தி சென்றுள்ளார். பஸ் திடீரென ஒரு இடத்தில் நிறுத்தப்பட வேகமாகச் சென்றவர் பஸ்ஸுடன் மோதுண்டு படுகாயமடைந்தார்.

உடனடியாக பூநகரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும் சிகிச்சை பயனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமாரினால் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணையைத் தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.