அச்சுவேலியில் பூமி பிளந்து அதனுள் செல்வது போன்று கனவா…? நிஜமா…?

அச்சுவேலி மேற்கு நவக்கிரி பகுதியில் J/ 287 கிராம சேவையாளர் பிரிவில் சுப்பிரமணியம் தர்மசேகரம் அவரது மனைவி லலிதா தர்மசேகரம் ஆகியோர் வாழ்ந்து வந்தனர்.

திருமணமான நாள் முதல் கணவன் மனைவி இருவரும் தோட்டம் செய்து வருகின்றனர். இருவரும் கடும் உழைப்பாளிகள், கடந்த 30 வருடகாலமாக கடுமையாக உழைத்து , சிறுக சிறுக சேமித்த பணத்தை கொண்டு கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் நவக்கிரி பகுதியில் தோட்டக்காணி 30 பரப்பும், அதனை அண்டி வீட்டுடன் 10 பரப்பு காணியும் வாங்கி இருந்தனர்.

வீட்டுடனே தோட்டமும் இருந்தால், அவர்கள் வீடும் தோட்டமும் என வாழ்ந்து வந்தனர். தோட்ட வேலைகளிலையே, தமது நேரங்களை கழித்தனர். தோட்டத்துடனையே வாழ்ந்தனர்.

தற்பொழுது தோட்டத்தில் 2 ஆயிரம் கன்று வெங்காயம் , ஆயிரம் கன்று கரட் , லீக்ஸ் , ஆகியவற்றை பயிர் செய்துள்ளனர். அவற்றின் பயனை பெற இன்னமும் 40 நாட்களே உள்ளன. அப்போது அந்த பயிரின் விலைகளை பொறுத்து அதன் விலைகள் அமையும் , அவற்றின் பெறுமதி பல ஆயிரங்களை தாண்டும்.

அத்துடன் மரவள்ளி, வாழை, புகையிலை, என்பவனவற்றையும் பயிர் செய்துள்ளனர்.

இவ்வாறாக தோட்டமும் வீடும் என வாழ்ந்து வந்தவர்கள், வழமை போன்று கடந்த 22ம் திகதி இரவு கணவன் மனைவி இருவரும் சாப்பிட்ட பின்னர் தூக்கத்திற்கு சென்று இருந்தனர்.

நேரம் நள்ளிரவை தாண்டியதும், பாரிய சத்தம் ஒன்று எழுந்ததை அடுத்து இருவரும் திடுக்குற்று எழுந்து பார்த்த போது தமது வீட்டின் சுவர்களிலும் , நிலத்திலும் , வெடிப்புக்கள் காணப்பட்டன.

அவ்வேளை அவர்கள் புவி அதிர்ச்சி என நினைந்து வீட்டை விட்டு வெளியே வந்து வீட்டின் வெளியே அன்றைய இரவினை நித்திரை இன்றி கழித்தனர்.

காலையில் நிலத்தில் வெடிப்பு ஏற்பட்டது என்பதுடன் யாழில் பூமி அதிர்ச்சி என்றும் தகவல்கள் வெகு வேகமாக பரவ அவர்களின் வீடுகளுக்கு அயல்கிராமங்கள் மட்டுமன்றி யாழின் பல பகுதிகளில் இருந்தும் பலர் படையெடுத்தனர். தமது கையடக்க தொலைபேசிகளில் படங்களை எடுத்து சமூக வலைத்தளங்கள் , இணையங்கள் என செய்திகள் மிக வேகமாக பரவின.

அதனை தொடர்ந்து அவ்விடத்திற்கு அதிகாரிகள் சென்று அப்பகுதிகளில் ஆரம்பகட்ட ஆய்வுகளை மேற்கொண்டனர். அதில் வீடு மாத்திரமின்றி அவர்களது தோட்ட காணிகள் என நிலத்தின் வெடிப்புக்கள் சுமார் 500 மீற்றர் தூரம் காணபட்டது.

நிலத்தில் ஏற்பட்ட வெடிப்பானது , அவர்களது வீட்டுக்காணி மற்றும் தோட்ட காணி என 40 பரப்பு காணியிலையே ஏற்பட்டு உள்ளது. அவர்களது தோட்டத்திற்கு அருகில் உள்ள தோட்டங்களில் பாதிப்பு ஏற்படவில்லை.

பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகள் வீட்டில் கணவன் மனைவி இருவரையும் வசிக்க வேண்டாம் என அறிவுறுத்தி சென்று இருந்தனர்.

அதனை அடுத்து கணவன் மனைவி இருவரும் அருகில் உள்ள தமது உறவினர்கள் வீட்டில் சென்று தங்கினார்கள்.

தொடர்ந்து அவ்விடத்தை அவதானித்து வந்த அதிகாரிகள் வெடிப்பு விரிவடைந்து செல்வதனை அவதானித்ததுடன் , புதிய இடங்களிலும் வெடிப்புக்கள் ஏற்பட்டதனையும் வெடிப்பு ஏற்பட்ட பல இடங்களில் நிலம் தாழ் இறங்கி இருந்ததையும் அவதானித்தனர்.

அதனை தொடர்ந்து அப்பகுதியை பொதுமக்கள் சென்று பார்வையிட தடை விதித்தனர்.

அதேவேளை தோட்டத்தில் இருந்த பயிர்களுக்கு நீர் இறைத்த போது , நீர் வெடிப்புக்களில் இறங்கி சென்று கொண்டிருந்தது. அதனால் மேலும் நீர் இறைக்க வேண்டாம் என அதிகாரிகள் அறிவித்தனர்.

அத்துடன் தேசிய கட்டங்கள் ஆய்வு ஆராய்ச்சி நிலையம், புவிசரிதவியல் அளவை சுரங்க பணியாகம், மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஆகியன குறித்த பகுதிகளில் ஆய்வுகளில் ஈடுபட்டன.

மண் மெல்லிய படையாக இருந்ததால் நிலத்தில் வெடிப்பு ஏற்பட்டது. மழைகாலங்களில் அப்பகுதிகளில் மிக அவதானமாக இருக்க வேண்டும். தோட்டத்திற்கு நீர் பாய்ச்சும் போது வெடிப்புக்களின் ஊடாக நீர் கீழ் இறங்குவதனால் வாய்க்காலுக்கு பதிலாக பொலித்தீன்களை பயன்படுத்தலாம்.

நிலவெடிப்பினால் பாதிக்கப்பட்ட வீட்டினை திருத்தவோ அல்லது அப்பகுதியில் புதிதாக வீடு கட்டுவதோ ஆபத்தானது என அப்பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்ட குழுவினர் அறிவித்தனர்.

வாய்க்காலின் ஊடக நீரினை விடாது பொலித்தீன் ஊடாக நீரினை பாய்ச்சலாம் ஆனால் பயிர்களுக்கு நீர் விடும் போது நீர் கீழ் இறங்கும் எனவே எமக்கு தூவல் நீர்பாசன முறைமையை ஏற்படுத்தி தர வேண்டும் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மிக விரைவான முறையில் தமக்கு அந்த முறைமையை சம்பந்தப்படவர்கள் செய்து கொடுத்தால் மாத்திரமே தோட்டத்தில் உள்ள தமது பெறுமதியான பயிர்களை காப்பாற்ற முடியும் என அவர்கள் கோருகின்றனர்.

அத்துடன் வீட்டினை திருத்த வேண்டாம். இப்பகுதியில் வசிக்க வேண்டாம் என அதிகாரிகள் கூறி சென்று உள்ளனர். நாம் எங்கே வசிப்பது, எமது பெயரில் 40 பரப்புக்காணி இருந்தும் காணியின் ஒரு மூலையில் கூட சிறு கொட்டில் கூட அமைத்து வசிக்க முடியாதவாறு எமது 40 பரப்பு காணியும் நிலவெடிப்பினால் பாதிக்கப்பட்டு உள்ளன.

நில வெடிப்பு ஏற்பட்டதை பார்வையிட வந்த ஒருவர் எம்மிடம் கேட்டார் ‘அது எப்படி உங்களுடைய 40 பரப்புக்காணி மாத்திரம் பாதிக்கப்பட்டு உள்ளது ? அருகில் உள்ள எவரது காணியிலும் வெடிப்பு ஏற்படவில்லை? உங்களுக்கு எதிரிகள் யாராவது இருகின்றார்களா ?

அவர்கள் உங்களுக்கு பில்லி சூனியம் ஏதாவது செய்து தான் உங்கள் காணியில் மாத்திரம் வெடிப்பினை ஏற்படுத்தினார்களா ? என கேட்டார்.

எமக்கு எதிரிகள் எவரும் இல்லை. எமக்கு இந்த பில்லி சூனியத்திலும் நம்பிக்கை இல்லை ஆனால் இறைவன் மீது நம்பிக்கையுண்டு ஆனால் அந்த இறைவன் ஏன் எமது காணியில் மாத்திரம் வெடிப்பினை ஏற்படுத்தி எம்மை எமது காணியில் வசிக்க விடாது செய்துள்ளான் என்பது தான் தெரியவில்லை.

ஆனால் இப்ப எல்லாம் இரவில் தூக்கமே வருகுதில்லை. இரவில் தூங்கினால் திடீர் என பூமி பிளந்து பூமிக்குள் நாங்கள் செல்வது போன்று கனவு வருகின்றது. திடுக்குற்று எழுந்தால் பிறகு நித்திரை வாராது.

இப்போது எமக்கு தேவையானது எமது பயிர்கள் அழிந்து போகாது காப்பாற்ற வேண்டும். அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் உதவ முன் வரவேண்டும். என நிலவெடிப்பு ஏற்பட்ட பகுதியில் வசித்த கணவன் மனைவி இருவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிலத்தில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக பல லட்ச ரூபாய் பெறுமதியான உடமைகளை பயிர்களை இழக்க உள்ள குடும்பத்திற்கு உதவுவதற்கு எவராவது முன் வருவார்களா ? அவர்களுக்கான உதவிகள் வழங்கப்படுமா ? என்பதனை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

நிலவெடிப்பு ஏற்பட்ட பகுதியினை பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா , வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு இருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.