போலி மின்னஞ்சலை கண்டுபிடிப்பது எப்படி ?

நம்மை எளிதாக ஏமாற்ற இணையத் திருடர்கள் பயன்படுத்துவது மின் அஞ்சல்களே. “நைஜீரியாவில் கணவர் விட்டுச் சென்ற பல கோடி டாலர்களை மீட்க உதவி செய்தால், உங்களுக்கு பத்து சதவீத டாலர் பணம், மரணத்தின் இறுதியில் உள்ளதால், என்னிடம் உள்ள பணத்தை ஏழைகளுக்கு வழங்க உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளேன், முகவரி, வங்கிக் கணக்கு தந்தால், பணத்தை அனுப்புவேன்’ என்றெல்லாம் நம்மை ஏமாற்றும் அஞ்சல்களை நாம் அடிக்கடி பெறலாம்.

இப்போதெல்லாம், இது போன்ற ஸ்கேம் மெயில்களை வடிகட்டி, ஸ்கேம் மெயில் போல்டருக்கு அனுப்பும் தொழில் நுட்பத்தை கூகுள் போன்ற மின் அஞ்சல் தளங்கள் பயன்படுத்தி வருகின்றன. இருப்பினும், சில அஞ்சல்கள், இவற்றின் பிடியில் சிக்காமல், நம்மை வீழ்த்தப் பார்க்கின்றன. அப்படிப்பட்ட ஓர் அஞ்சலைப் பெற்றால், சந்தேகம் ஏற்பட்டால், என்ன செய்வது?

இந்த வகையில் நமக்கு உதவ ஓர் இணைய தளம் இயங்குகிறது. வந்திருக்கும் அஞ்சலில் உள்ள சில சொற்களை, இந்த தளத்திற்கு அனுப்பினால், அது சோதனை செய்யப்பட்டு, நமக்கு அது ஸ்கேம் வகை அஞ்சலா அல்லது வழக்கமான அஞ்சலா என்று தெரிவிக்கிறது. இந்த தளத்தின் இணைய முகவரி  jasonmorrison.net

இந்த தளமானது கூகுளின் தேடல் இஞ்சின் ஒன்றைப் பயன்படுத்துகிறது. இந்த தேடல் இஞ்சின், ஏற்கனவே ஸ்கேம் மற்றும் திருட்டு முயற்சிகளுக்கு எதிராக வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசின் தளங்கள் மற்றும் சில குழு தகவல் தளங்களின் உதவியுடன், வந்திருப்பது ஸ்கேம் மெயிலா எனக் கண்டறிகிறது. இந்த தளத்தை அடைந்தவுடன், தேடல் கட்டத்தின் கீழாக உள்ள LEARN MORE என்ற லிங்க்கில் கிளிக் செய்து, கிடைக்கும் தகவல்களைப் பாருங்கள்.

இந்த தளம் ஏற்பட்டதன் நோக்கம் என்ன, என்ன வகையில் உங்களுக்கு உதவுகிறது என்ற தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.

எனக்கு வந்த மெயில் ஒன்றில், ரொஸட்டா என்ற பெயரில் விலை உயர்ந்த மரகதக் கல் ஒன்று குறைந்த விலைக்குக் கிடைப்பதாக தகவல் இருந்தது. அப்படியே அதன் முக்கிய சொற்களைக் காப்பி செய்து, இந்த தளத்தில் போட்டு கிளிக் செய்த போது, சில விநாடிகளில் தகவகள் கிடைத்தன. இது போன்ற ஸ்கேம் மெயில்கள் எங்கெல்லாம் அனுப்பப் பட்டுள்ளன என்ற தகவலும் கிடைத்தது. இனி, எந்த சந்தேகம் தரும் மெயில் வந்தாலும், அதனை இந்த தளத்தின் உதவியுடன் சோதனை செய்து, அதன் உண்மைத் தன்மையினை அறிந்து கொள்ளுங்கள்