யாழ்.குடாவில் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் கைது

யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற பல கொள்ளை சம்பவங்கள் மற்றும் கட்டப்பஞ்சாயத்து சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பெயரில் தேடப்பட்டுவந்த சந்தேகநபர் ஒருவரை மானிப்பாய் பொலிஸார் நேற்றைய தினம் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு மற்றும் தங்க நகைகள், கைத்தொலைபேசிகளுடன் கைது செய்திருக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

உடுவில் கிழக்கை சேர்ந்த மகேந்திரன் ரஜிந்தன் (வயது 27) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

இது தொடர்பாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஐ.பி.நாலக்க ஜெயவீர ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டிருந்ததாவது, 

மானிப்பாய் பகுதி உள்ளிட்ட குடாநாட்டின் பல பகுதியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவங்கள் மற்றும், கட்டப்பஞ்சாயத்து சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பெயரில் மேற்படி நபர் தேடப்பட்டுவந்தார்.

இந் நிலையில், நேற்று மாலை நேரத்தில் மானிப்பாய் பகுதியிலிருந்து மோட்டார் சைக்கிளில் இணுவில் பகுதிக்கு சென்று வருகின்றமை மேற்படி வீதியில் உள்ள பாதுகாப்பு கமரா ஒன்றில் பதிவான நிலையில் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டிருந்த போதே நேற்றைய தினம் இரவு இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்த நபர் சில தினங்களுக்கு முன்னரும் மானிப்பாய் பகுதியில் வீடொன்றில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதுடன், குறித்த நபர் கைது செய்யப்படும்போது உள்ளூர் தயாரிப்பில் உருவான 
3 கைக்குண்டுகளை தன்வசம் வைத்திருந்திருக்கின்றார். 

இவர் தாம் கைது செய்யப்படும் நிலை உருவானால் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தவே மேற்படி கைக்குண்டுகளை தம்வசம் வைத்திருந்ததாக விசரணைகளில் தெரியவந்துள்ளது. 

இந்த உள்ளூர் தயாரிப்பிலான கைக்குண்டுகளை அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்திற்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. 

மேலும் மேற்படி நபர் கைது செய்யப்படும் போது விலை உயர்ந்த 8 கைத்தொலைபேசிகள் மற்றும் 10 பவுணுக்கும் மேற்பட்ட நகைகள், மற்றும் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் ஒன்றையும் தன்வசம் வைத்திருந்திருக்கின்றார். 

இந்நிலையில் மேற்படி தேடப்பட்டு வந்த சந்தேக நபரை கைது செய்யும் முயற்சியில் எம்முடன் எஸ்.ஜ.மிலால், எஸ்.ஜ.பேட்டி, பொலிஸ் அதிகாரி பண்டார சுகந்தன் தானநாயக்க மற்றும் சாகர ஆகியோர் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது என்றார்.