யாழ்ப்பாணத்தில் வெள்ளை வானில் கடத்தப் போவதாக எச்சரித்தவர்கள் கைது!

யாழ்ப்பாணம், இராசாவின் தோட்டப் பகுதியில் யுவதியொருவரின் வீட்டுக்குச் சென்று வெள்ளை வானில் கடத்துவோம் என்று அச்சுறுத்தல் விடுத்த மூவரை,யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் இன்று காலை கைது செய்துள்ளனர். கைதான மூவரும், 28, 30 மற்றும் 36 வயதுடையவர்கள் என தெரிவித்த பொலிஸார், இவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பகுதியினைச் சேர்ந்தவர்கள் எனக் கூறினர்.   

கடந்த 16ஆம் திகதி இராசாவின் தோட்டப்பகுதியில் உள்ள யுவதியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தகராறில் ஈடுபட்டுள்ள இந்த மூவரும், உன்னை வெகுவிரைவில் வெள்ளை வான் கொண்டு வந்து கடத்துவோம் என மிரட்டிச் சென்றுள்ளனர். எனினும், குறித்த யுவதி வாகனத்தின் இலக்கத்தினை குறிப்பெடுத்து வைத்துள்ளதுடன், இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். 

வாகன இலக்கத்தினை அடிப்படையாக வைத்து துரித விசாரணைகளை மேற்கொண்ட குற்றத்தடுப்பு பொலிஸார், சந்தேகநபர்கள் மூவரையும் கைதுசெய்துள்ளதுடன், வாகனத்தையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.