யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவு பிரமாண்டமாக உருவாகிறது

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நவீன வசதிகளைக் கொண்ட விபத்து அவசர சிகிச்சைப் பிரிவுக்கான இரு மாடி கட்டட நிர்மாணப் பணிகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த கட்டட நிர்மாணப் பணிகளில் 100 வரையான தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆறு தளங்களைக் கொண்டமைந்த கட்டடத் தொகுதியில் முதலிரு தளங்களிலும் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு இயங்கவுள்ளது என வைத்தியசாலையின் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

உலக வங்கி, இலங்கை அரசாங்கத்தின் ஊடாக வழங்கிய 590 மில்லியன் ரூபா நிதிப்பங்களிப்பில் முதல் இரு தளங்களுக்குமான வேலைகள் நடைபெற்று வருகின்றது.

கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி முதல் இரு தளங்களுக்குமான கட்டுமானப் பணிகள் வைத்தியசாலையின் பணிப்பாளர் ரி. சத்தியமூர்த்தியினால் சம்பிரதாய பூர்வமாக அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது வைத்தியசாலையின் 24ஆவது விடுதி விபத்து அவசர சிகிச்சைப் பிரிவாக இயங்கி வருகிறது. இதில் விபத்தில் காயங்களுக்கு உள்ளானவர்கள் உடனடியாக அனுமதிக்கப்படுவார்கள்.

சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டிய நோயாளர்களுக்கு வைத்தியசாலையிலுள்ள இரு சத்திரசிகிச்சைக் கூடங்களில் சத்திரசிகிச்சைகள் இடம்பெறும்.

இவ்வாறு சத்திர சிகிச்சை முடித்துக் கொண்டநோயாளர்களும், ஏனைய நோயாளர்களும் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனியாக உள்ள விடுதிகளில் அனுமதிக்கப்படுவார்கள்.

இந்தப் பிரிவில் போதுமான இடவசதிகள் இன்மையால் நோயாளர்களும், வைத்தியர்களும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

விபத்து அவசர சிகிச்சைப் பிரிவின் கீழ் இயங்கும், விடுதிகளில் சத்திர சிகிச்சைக்குப் பின்னர் அனுமதிக்கப்படும் பல நோயாளர்கள் தரையில் படுத்து உறங்க வேண்டிய நிலையும் காணப்படுகிறது.

இந்த நிலையில் புதிதாக அமைக்கப்படும் இரு தளங்களைக் கொண்ட விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு மூலம் இதுவரை காலமும் நீடித்து வந்த இடநெருக்கடிக்குத் தீர்வு கிடைக்கும்.

2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமளவில் முதலிரு தளங்களுக்குமான வேலைகள் நிறைவடையும்.

இலங்கை அரசாங்கத்தின் அனுமதி கிடைக்கப் பெற்ற பின்னர் ஏனைய தளங்களுக்கான வேலைகள் ஆரம்பிக்கப்படும்.

மற்றைய தளங்களில் அவசர சிகிச்சைப் பிரிவு, மருத்துவ சிகிச்சைப் பிரிவு போன்ற விடுதிகள் அமைக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.