குளத்து மீன்பிடி அமைச்சர் டெனிஸ்வரன் அவர்களே: ஊடகங்களுக்கு பாடமெடுப்பதை உடன் நிறுத்துங்கள்

குளத்து மீன்பிடி அமைச்சர் டெனிஸ்வரன் அவர்களே, 

வடமராட்சி கடலோடிக்கு நேர்ந்த அவலம் தொடர்பில், தகுந்த வீடியோ ஆதாரம், படங்கள், ஆவணங்களையும் சேர்த்து ஒரு நாள் முழுவதும் செலவழித்து ஒரு செய்தியினை தயார் படுத்தி பிரசுரித்தால் அந்த ஊடகத்தை முகவரி இல்லாத இணையம், அரசியல்வாதியின் எலும்புத்துண்டுக்கு  அலைபவர்கள் என்று வசைமாரி பொழிகின்றீர்கள். 

இன்று உலகில் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து இணையங்களும் ஏதோ ஒரு நாட்டில் பதிவு செய்யப்பட்ட்டுள்ளது என்பது தங்களுக்கு தெரியாதா? அரசியல்வாதியின் எலும்புத் துண்டுக்கு நாங்கள் அலைந்திருந்தால், ஊடகங்களுக்கு எலும்புத் துண்டு போட்டு பழக்கப்பட்ட உங்களிடமும்  எலும்புத் துண்டைப் பெற்றுவிட்டு பேசாதிருந்திருப்போம். என்ன செய்ய எலும்புத் துண்டுக்கு செய்தி போடும் இணையமாக நாங்கள் இயங்கவில்லை. 

தென்னாசியாவிலேயே வெற்றிகரமாக பணம் கொழிக்கும் வியாபாரம் செய்ய வேண்டும் என்றால் அரசியல்வாதியாகிவிடுவது தான் ஒரே வழி என்பார்கள். சட்டத்தரணியான நீங்கள்  ஏன் அரசியல்வாதியாகினீர்கள் என்பது தொடர்பில் நாங்கள் கேள்வி கேட்க வரவில்லை. 

தவிர, செய்தியின் மையப் பிரச்சினையை விட்டு விட்டு எலும்புத் துண்டு, முகவரியற்ற இணையம் போன்ற சொற்பதங்களை பயன்படுத்த நாங்கள் ஒன்றும் கடும் பிழையை சரியாக காட்ட வாதிடும் சட்டத்தரணியும் அல்ல. 

முதலில் ஒரு மக்கள் நலன் சார்ந்த சமூகப் பிரச்சினை ஊடகமொன்றில் பிரசுரமாகிறது என்றால், முதலாவது அது எங்கே நடந்தது? என்று விசாரித்து அதற்கு தீர்வு காண முயன்றிருக்க வேண்டும். அதை விடுத்து ஊடகங்களை குறை சொல்வதில் எவ்வித நியாயமும் இல்லை. 

தனிப்பட்ட டெனிஸ்வரன் மீது எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.  ஆனால், வடக்கு மீன்பிடி அமைச்சராக இருக்கின்ற உங்கள் மீது தான் எங்களின் தார்மீக கோபம் கொப்பளிக்கின்றது. 

ஆம், கடந்த வருடக் கடைசியில் வடமராட்சி  கிழக்கில் இருந்து தலைப் பிள்ளையைப் போராட்டத்துக்கு பறி கொடுத்து  விட்டு உங்களிடம் வலை உதவி கோரி யாழ்ப்பாணத்தில் உள்ள உங்களின் அலுவலகத்துக்கு வந்த அண்ணாமலையிடம் நீங்கள் நடந்து கொண்ட விதமும் அதற்கு அவர் எங்களிடம் கண்கலங்கி சொன்ன விடயங்களும் தான் செய்தியின் மூலாதாரங்கள். 

இந்திய மீனவர்களினால் பல தடவைகள் வலையை இழந்த அவர் உங்களிடம் பண உதவி கோரி வரவில்லை. வலையை தந்துதவுமாறு கேட்டே கடிதத்துடன் வந்துள்ளார். ஆனால், நீங்களோ கடிதத்தை பெற்றுக் கொண்டேன் என சீல் அடித்து விட்டு மூலக் கடித்ததையே அவரிடம் கொடுத்துள்ளீர்கள். அதற்கு நீங்கள் சொல்லும் வியாக்கியானம், அவர் அந்தக் கடிதத்தை கேட்டார் நானும் கொடுத்து விட்டேன் என்கிறீர்கள். பொறுப்பான அமைச்சர் சொல்லும் பதிலா இது? மூலக் கடிதத்தை வாங்கி வைத்துவிட்டு அதன் பிரதியை அல்லவா நீங்கள் கொடுத்திருக்க வேண்டும். 

வலை கேட்டு வந்தவரிடம் நீரியல் வளத் திணைக்களத்திடம் சென்று மகனின் மரணத்தை உறுதிப்படுத்துமாறு நீங்கள் கூறி இருக்கின்றீர்கள். இந்த தகவல்களை எங்களிடம் காணொளியில் கூறிய அண்ணாமலை அவர்கள் சித்த சுவாதீனமற்றவர் அல்ல என்பதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதன் பிற்பாடு வடமராட்சி கிழக்கில் நடந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் பங்கேற்ற அண்ணாமலை அவர்கள் உங்களிடம் பல கேள்விகளை கேட்டு இருக்கிறார். 

அண்ணாமலை அவர்கள் தனது பிரச்சினைக்காக மட்டும் கதைப்பவர் அல்ல. ஊர்ப் பிரச்சினைகளுக்காக கதைத்து போராடித் தான் இன்று வீட்டுத் திட்டமும் இல்லாமல் நடுத்தெருவில் அலைகின்றார் என்பது தங்களுக்கு தெரியுமா? தனது பெண் பிள்ளைகளை படிப்பித்து ஆளாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் தான் இன்பசிட்டி பகுதியில் மழைக்கு ஒழுகும் வாடகை வீட்டில், மின்சார வசதி கூட இல்லாமல் வாழ்ந்து வருகிறார். அவரின் பிள்ளைகள் இன்னமும் குப்பி விளக்கில் தான் படித்து வருகின்றனர் என்பதனை தாங்கள் அறிவீர்களா? 

முள்ளிவாய்க்காலுக்கு பின் பல வாடகை வீடுகள் மாறி மாறி, தற்போதுள்ள வீட்டையும் வீட்டு  உரிமையாளர் விடச் சொல்லியுள்ளதால் வாடகை வீடு தேடி அலைந்து வருகிறார். பெமிற் காணிக்கு வீட்டுத் திட்டம் இல்லை எனக் கூறியதால், வத்திராயனில் காணி வாங்கிய பிற்பாடும் தோம்பைக் கொண்டு வா என நொண்டிச் சாட்டுக் கூறி வீட்டுத் திட்டத்தையே மறுத்திருக்கிறார் மருதங்கேணி பிரதேச செயலாளர். பிழையென்றால் எல்லாவற்றையும் தட்டிக் கேட்க்கும் அண்ணாமலையின் நேர்மையால் தான் இன்று வரை அவருக்கு வீட்டுத் திட்டம் கூடக் கிடைக்கவில்லை. 

இதுவரை வலை கிடைக்காததற்கும் அவரின் நேர்மை தான் காரணமோ எனத் தெரியவில்லை. 

நீங்கள் கூறிய இன்னுமொரு கருத்து எம்மையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. 

நான் கடல் மீன்பிடி அமைச்சர் இல்லை. ஆறு, குளம், ஏரிக்கு தான் அமைச்சர் என்று கூறியுள்ளீர்கள். ஊடகவியலாளர்களுக்கே நீங்கள் சொல்வது புதிதாக இருக்கின்றது.  உண்மை கடவுளுக்குத் தான் வெளிச்சம். 

நீங்களும் உங்கள் அமைச்சின் அதிகாரிகளும் பயன்படுத்தும் சுமார் 3 சொகுசு வாகனங்களின் மொத்த விலையை விட நீங்கள் முன்னாள் போராளிகளுக்கு ஒதுக்கிய பணம் மிகக் குறைவானதாகும். 

போரில் சிக்கி சின்னாபின்னமான ஒரு தேசத்தின் அமைச்சர் என்பதனை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 

தேசத்தையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் துரிதமாக கட்டி எழுப்ப வேண்டிய ஒரு இடத்தில் நின்று கொண்டு போர்க்கால அடிப்படையில் பணி செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றீர்கள் என்பதனை மறந்து விடாதீர்கள்.  

திறமையான அதிகாரிகளை வைத்திருக்கும் நீங்கள் மக்களுக்குள் சென்று அவர்கள் பகுதிகளில் முகாமிட்டு அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யவில்லை என்றால் நாளைய சமுதாயம் உங்களை என்றும் மன்னிக்காது. 

2009 க்கு முன்னர் சட்டத்தரணியாக பணியாற்றிய நீங்கள் எத்தனை போராளிகளின் வழக்குகளில் ஆஜராகி உள்ளீர்கள் என்பதனை கூறுவீர்களா? 

தமிழ்த் தேசியத்தின் பெயரால் ஆட்சிக் கதிரை, சொகுசு பங்களா, கார் என அத்தனையையும் அனுபவிக்கும் நீங்கள், மாவீரர்களை, முன்னாள் போராளிகளை கிஞ்சித்தும் மதிக்காதது தான் வேதனையைத் தருகிறது. 

நீங்கள் முன்னாள் போராளிகளிடம் விண்ணப்பங்களை பெற்று உதவி செய்வதாக சொல்வது, யானைப் பசிக்கு சோளப் பொரி என்கிற சொற்றொடருக்கு ஒப்பானதாகும். 

இன்னமும் வெளியில் வராத, முன்னாள் போராளிகள் படும் பேரவலங்களை நாங்கள் தினமும் பார்த்து வருகின்றோம். 

உங்களின் சொகுசு வாகனங்கள் போகமுடியாத குக் கிராமத்தின் குச்சொழுங்கைகளுக்குள் சென்று பாருங்கள். 

அந்த இடங்கள் தெரியவில்லை என்றால் சொல்லுங்கள். கொண்டு போய்க் காட்டுகின்றோம். 

எமக்காக போராடியவர்கள் நிர்க்கதியாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு நேரடியாக சென்று உதவுங்கள். உங்களின் அலுவலகத்துக்கு வா எனக் கேட்க்காதீர்க்ள். உங்களைத் தேடி வருபவர்களுக்கு என்ன பாடுபட்டாவது உதவுங்கள். 

உண்மையில் இதய சுத்தியோடு நீங்கள் பணியாற்றத் தயார் என்றால், நாங்களும் உங்களோடு இணைந்து பணியாற்றத் தயார். 

உங்களால் மீது எங்களுக்கு தனிப்பட்ட பகையோ, அரசியல் காழ்ப்புணர்வோ எள்ளளவும் இல்லை என்பதனை உங்களுக்கு மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகின்றோம். 

தொடர்புடைய செய்தி:

மீன்பிடி வலை கேட்ட கடலோடியிடம் மாவீரரின் மரணச் சான்றிதழ் கேட்ட டெனிஸ்வரன் (Video)