உடுவில் மகளிர் கல்லூரி மாணவியைத் தாக்கிய மைனாவதியிடம் சுன்னாகம் பொலிஸார் விசாரணை

யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் அதிபரின் பதவிக் காலத்தை நீடிக்க வலியுறுத்தித் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்த போராட்டம் கடந்த-07 ஆம் திகதி கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் தென்னிந்தியத் திருச் சபையின் தலைவர் டீ. எஸ். தியாகராஜாவின் அடியாட்களால் திட்டமிட்டுக் குழப்பப்பட்டது. இதன் போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் மீது கடும் தாக்குதல்களும் , தவறான வார்த்தைப் பிரயோகங்களும்  பிரயோகிக்கப்பட்டது.  

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு முறையிடப்பட்ட போதும் உரிய நடவடிக்கைகள் எடுப்பதில் தாமதமான சூழ்நிலை நீடித்து வந்த நிலையில் மாணவிகள் மீதான தாக்குதல் தொடர்பில் காணொளி ஆதாரங்களைச் சமர்ப்பிக்கும் பட்சத்தில் சம்பந்தப் பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராகவிருப்பதாகச் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தகிருந்தனர். 

இதற்கமைய கல்லூரியில் க.பொ. த உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவியொருவர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை(19) ஆசிரியையொருவர் தன்னைத் தாக்குவது தொடர்பான காணொளி ஆதாரங்களுடன் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்தார். 

இதன் எதிரொலியாக நேற்று செவ்வாய்க்கிழமை(20-09-2016) பிற்பகல் சம்பந்தப்பட்ட ஆசிரியை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுப் பொலிஸ்  நிலையம் கொண்டு செல்லப்பட்டார். 

அங்கு அவர் பிற்பகல் 03.30 மணி முதல்  சுமார் இரு மணித்தியாலங்களுக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுத் தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டார். 

காணொளி ஆதார பூர்வமாக இருந்த நிலையில் ஆசிரியையால் சம்பவத்தை மறுக்க முடியவில்லை.இதனால், குறிப்பிட்ட மாணவியைத் தாக்கியதை ஏற்றுக் கொண்ட ஆசிரியை தன் தவறை ஏற்றுக் கொண்டு கண்ணீர் விட்டு அழுதுமுள்ளார். 

பின்னர் தாக்கப்பட்ட மாணவியிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்ட ஆசிரியை தான் குறித்த மாணவியைத் தாக்கியதை ஏற்றுக் கொண்டு எழுதப்பட்ட பிரதியில் கையெழுத்து இட்டுத் தாக்கப்பட்ட மாணவியிடம் வழங்கியுள்ளார்.

ஆசிரியை தான் செய்த தவறை ஏற்றுக் கொண்டதுடன், பகிரங்க மன்னிப்புக் கொண்டதன் அடிப்படையில் மாணவி குறித்த பிரச்சினையைச் சுமூகமாகத் தீர்ப்பதற்கு இணங்கியுள்ளார். தனக்குக் கல்வி கற்பித்த ஆசிரியை மீது கொண்ட மதிப்பினாலும், இரக்கத்தினாலுமே மாணவி இதற்குச் சம்மதித்துள்ளார். அத்துடன் கல்லூரியின் தற்போதைய உப அதிபரும் பொலிஸ் நிலையம் சென்று சம்பவம் தொடர்பில் மன்னிப்புக் கோரியுள்ளார். 

கல்லூரியின் ஆசிரியையான மைனாவதி ஆசிரியையே இவ்வாறு கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவராவார்.