கடலுக்கடியில் இருக்கும் பனிப்பாறைகள் போன்றதே இனப்பிரச்சினை

அண்மையில் ஒரு ஆவணப்படத்துக்காக "இன நல்லிணக்கம்" சார்ந்து நீண்டகாலமாக வேலை செய்துவரும் ஒரு சிங்கள பெண்மணியிடம் பேட்டி எடுத்தேன். அவர் மிகவும் டீசன்டானவர். சிங்கள இனவெறி என்று ஏதும் இல்லாத "நல்ல" சிங்களவர். எங்கடை தமிழ் புத்திஜீவிகளின் மொழியில் "சிங்கள முற்போக்கு சக்திகள்" என்னும் வகையறாவுக்குள் வரக்கூடியவர்.

இலங்கையின் இனப்பிரச்சினை மற்றும் மோதல் சம்பந்மான ஒரு கேள்விக்கு அவர் பின்வருமாறு பதில் சொன்னார்,

"ஒரு சிலரால் மட்டுமே இந்தப் பிரச்சினை. மற்றப்படி பெரும்பாலான சிங்கள-தமிழ் மக்கள் இந்த நாட்டில் ஒற்றுமையாகத்தான் இருந்து வருகிறார்கள் It is a beautifull country and all people are good hearted "

இந்த வசனத்தை பல சிங்களவர்கள் பாடமாக்கி வைத்திருக்கிறார்கள் அனேகமாக NGO களில் வேலை செய்கிற மேட்டுக்குடி சிங்களவர்கள் வெளிநாட்டுக் காரர்களுக்கு சொல்ற வசனம் இது. சொல்லிவிட்டு அருகில் நிற்கும் தமிழரை பார்த்து "அப்பிடித்தானே ....." எனக் கேட்பார்கள். உடனே அந்த மத்தியதரவர்க்க தமிழர் ஹி....ஹி.... என்று பல்லைக் காட்டியபடி "யெஸ்... யெஸ்...." என்றபடி தன் பிழைப்பை பாதுகாத்து கொள்வார்.

இதைவிட அவர்கள் சொல்லும் இன்னொரு புருடா,

83 இல் தமிழரை அடிச்சது சேரிப்புறத்து "தக்ஸ்" மட்டுமே. தமிழரைச் சுடுகிற, கெட்டவேலை செய்யிற ஆமிக்காரர்கள் எல்லாம் படிக்காமல் ஆமியிலை சேர்ந்த "கமே கட்டியா"!

போதாக்குறைக்கு LTTE இலை சேருகிறவர்களும் அப்படிப்பட்ட தமிழர்கள்தான் என்று சொல்லி தம் தமிழ் மேட்டுக்குடி நண்பர்களுக்கு நல்ல பேர் வாங்கிக் கொடுப்பார்கள்.

எங்கடை அரைகுறை மேட்டுக்குடி மக்களும் தலையாட்டுவார்கள்.

பகிடி என்னவென்றால், இலங்கையின் இனப் பிரச்சினை பற்றி இந்தளவு புரிதல் மட்டுமே உள்ள சிங்களவர்களும் அவர்கள் சொல்வதற்கெல்லாம் தம் பிழைப்புக்காக "ஆமா" போடுகிற தமிழர்களும்தான் "இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம்" சார்பான வேலைகளை முன்னெடுக்கிறார்கள்.

"இன மோதுகை" (ETHNIC CONFLICT ) என்பது வெறுமனே ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வது அல்ல. அடிப்பது, போரிடுவது என்பவை வெறும் அறிகுறிகள் மட்டுமே. அவையல்ல நோய்கள். நோய்கள் அடியில் தூங்கிக் கொண்டிருக்கின்றன.

உதாரணமாக அரச உத்தியோகத்துக்காக விண்ணபித்துவிட்டு காத்திருக்கிற ஒவ்வொரு சாமான்ய சிங்களவரும் தமிழர் காரணமாக தனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுமோ என அச்சப்படுகிறார். மருத்துவம் படிக்க நினைக்கும் ஒவ்வொரு தமிழ் மாணவரும் சிங்கள மாணவர்களால் தாம் தட்டுப்பட்டு விடுவமோ எனப் பயப்படுகிறார்.

இது அர்த்தமற்ற பயமும் அல்ல. இந்த நாட்டில் ஒவ்வொரு துறை சார்ந்தும் ஒவ்வொரு இனமும் மற்ற இனத்துக்கு போட்டியாக உள்ளது என்பதே யதார்த்தம்.

யாழ்ப்பாணம் அல்லது மட்டக்களப்பில் இருக்கிற தமிழர்களை விடவும் கொழும்பில் அரச அலுவலகங்களில் வேலை செய்கிற தமிழர்கள் சிங்களவர்கள் மீது அதிக "கடுப்புடன்" இருக்கிறார்கள்.

ஏன்?

ஏனெனில்....

இவர்கள் அந்த போட்டிகளுக்கு நாளாந்தம் "நேரடியாக" முகம் கொடுக்கிறார்கள்.

அது மட்டுமின்றி பல்கலைகழகங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் தத்தமது அடையாளங்களை முதன்மைபடுத்துவதற்கான போட்டிகள் உள்ளன.

இவை தவிர நிலம், வியாபாரம், கலை, கலாச்சாரம் என அனைத்து விடயங்கள் சார்ந்தும் ஒவ்வொரு இனமும் மற்ற இனத்துடன் போட்டியிட்டுக் கொண்டேயிருக்கின்றது.

இந்த போட்டிகளை வைத்து பிழைப்பு நடாத்தும் தமிழ் - சிங்கள - முஸ்லிம் கூட்டுகளும் கூட நாளடைவில் தமக்குள் போட்டியிடவே செய்கின்றனர்.

ஆனால்....

இந்த போட்டிகளில் சிங்களம் அல்லாத இனங்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ தோற்கடிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றனர்.

நானறிய, எந்த ஒரு சிங்களவரும் தான் பெரும்பான்மை இனமாக இருக்கும் காரணத்தால் தனக்கு கிடைக்கும் "சிறப்பு வாய்ப்பை" நீதியின் பொருட்டு வேண்டாம் என்று சொன்னதுமில்லை தன் நெருங்கிய தமிழ் நண்பன் அல்லது நண்பிக்காக விட்டுக் கொடுத்ததும் இல்லை.

இங்கே பகைமை வளர்ந்து கொண்டேயிருக்கிறது என்பதே உண்மை.

உண்மையில் இனப் பிரச்சினை என்பது கண்ணுக்குத் தெரியும் மோதல்கள் அல்ல. அவை கடலுக்கடியில் இருக்கும் பனிப்பாறைகள் போன்றவை.

நன்றி: ஞானதாஸ்