நீதி வேண்டி குழந்தையுடன் நடுத்தெருவில் சத்தியாகிரக போராட்டத்தில் குதித்த சகோதரிகள் (Photos)

இலங்கையின் மத்திய மாகாணத்தின் மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்டு மாகந்த முகாமில் சுமார் 23 மாதங்களை கடத்தியுள்ள தமக்கு புதிய வீடமைப்புத்திட்டத்திற்கமைய நிரற்படுத்தப்பட்டுள்ள பெயர் பட்டியலில் தமது பெயர் உள்வாங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சகோதரிகள் இருவர் 20.09.2016 அன்று பண்டாரவளை நகர பஸ் தரிப்பிடத்திற்கு அருகிலுள்ள சுற்று வட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்து சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

மீரியபெத்த தோட்டத்தில் இரு குடும்பங்களாக இரு வீடுகளில் வாழ்ந்து வந்த இவர்கள் மண்சரிவில் சிக்குண்டு தமது உறவுகளையும் பறிகொடுத்து, தமது உடமைகளையும் இழந்த நிலையிலேயே குறித்த முகாமில் தங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறு இருக்கையில் 19.09.2016 அன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுகளை கையளிப்பது தொடர்பில் நடந்த கலந்துரையாடலின் போது, குறித்த சகோதரிகள் இருவரில் ஒருவருக்கு மாத்திரமே வீடு கிடைக்கப்போவதாக பிரதேச செயலகம் தெரிவித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே சகோதரிகள் குறித்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

தமக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்கும் வரை தாம் இவ்விடத்தை விட்டு போவதில்லை என போராட்டத்தை ஆரம்பித்துள்ள சகோதரிகள் தெரிவிக்கின்றனர்.