வடக்கில் இளைஞர், யுவதிகளின் கல்விச் செயற்பாடுகள் சரிவடைந்தமைக்கான காரணம் என்ன?

பாரிய யுத்த நிகழ்வுகளின் விளைவாக இங்குள்ள இளைஞர் யுவதிகள் பதற்ற நிலைக்குள்ளானார்கள். அவர்கள் கல்வியின் பால் கவனம் செலுத்த முடியாமல் தத்தளித்தார்கள். அரச படைகளின் அட்டூழியங்களால் தமது வாழ்விடங்களில் வாழப் பயந்து பலர் உயிரைக் கையிற்பிடித்தபடி வெளிநாடுகளுக்கும், இலங்கையின் வேறு பாகங்களிற்கும் ஓடித்தப்பினர். 

ஏனையோர் பயந்து நடுங்கி வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்க வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டது. கல்வி பாதிக்கப்பட்டது. உடல்நிலை பாதிக்கப்பட்டது. உள்ளம் பாதிக்கப்பட்டது. பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. 

போர் உக்கிரத்தின் போது பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் முழு நேரமாகத் தம்மைப் போர் நடவடிக்கைகளில் ஈடுபடுத்திக்கொண்டதன் காரணமாக கல்வியில் சிறந்த நிலையிலிருந்த  இளைஞர் யுவதிகளின் கல்விச் செயற்பாடுகள் சரிய ஆரம்பித்தன எனத் தெரிவித்தார் வடமாகாண முதலமைச்சர் க. வி. விக்கினேஸ்வரன். 

இளைஞர் கொள்கைகள் செயற்திட்டம் தொடர்பில் பங்குதார்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்றுத் திங்கட்கிழமை(19-09-2016) முற்பகல் யாழ். கிறீன் கிறாஸ் தனியார் விடுதியில் இடம்பெற்ற போது  வடமாகாண முதலமைச்சர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். 

அவர்  மேலும் உரையாற்றுகையில், 

அந்நியர் ஆட்சிக் காலத்தில் பல நூறு வருடங்கள் சகோதர இனங்களாக வாழ்ந்து வந்த சிங்கள, தமிழ் சமூகங்கள் இலங்கைக்கான சுதந்திரம் கிடைப்பதற்கும் ஆங்கிலேயர் ஆட்சியை இல்லாது ஒழிப்பதற்கும் சேர்ந்து போர்க் கொடியேந்தினர். ஆனால், இலங்கை சுதந்திரம் பெற்று ஒரு சொற்ப காலத்தினுள்ளேயே இனங்களுக்கிடையே கருத்து வேறுபாடுகளும் மோதல்களும் ஏற்படத் தொடங்கின. 

தாம் எண்ணிக்கையில் கூடியிருந்ததால் எண்ணிக்கையில் குறைந்தவர்களைக் குட்டி வைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு பல மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் பங்குபற்றத் தலைப்பட்டனர் .

குறிப்பிட்ட பெரும்பான்மையினர் கடையெரிப்புக்கள், சொத்துக்கள் அழிப்பு, உயிர்ச்சேதம் என 1958ல் இலங்கையில் தோன்றிய இனக்கலவரம் காலத்திற்குக் காலம் 1961, 1974, 1977, 1983 எனப் பல்வேறு கால இடைவெளிகளில் தமிழர்களின் சொத்தைச்  சூறையாடுவதும் அவர்களின் இருப்பிடங்களை ஆக்கிரமித்தல், அழித்தொழித்தல் போன்ற தொடர் நெருக்கடிகளின் விளைவே தமிழ் இளைஞர்களை, இள இரத்தங்களை வன்முறைச் செயற்பாடுகளில் ஈடுபடத் தூண்டின.

அன்றைய அரசியற் தலைமைகள் இவ்வாறான தருணங்களில் தமது ஆட்சியதிகாரங்களைப் பயன்படுத்தி அன்றைய பதற்ற நிலைகளைத் தணித்து இனங்களுக்கிடையே ஒற்றுமையை உண்டாக்குவதற்கும், புரிந்துணர்வுடன் வாழ்வதற்கும் ஏற்ற முயற்சிகளில் ஈடுபட்டிருந்தால் இந்த அழகிய இலங்கைத் தீவினுள் அனைத்து இனங்களும் ஐக்கியத்துடனும் புரிந்துணர்வுடனும் பரஸ்பரம் விட்டுக்கொடுக்கின்ற தன்மையுடனும் சுதந்திரமாக வாழ்வதற்கான சந்தர்ப்பங்கள் நிறைய இருந்தன. 

அன்றைய அரசியற் தலைமைகள் தமது அரசியல் சுயலாபங்களுக்கும், தமது பாராளுமன்ற இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் அப்பாவிச் சிங்கள மக்களைப்  பிழையான வழிகளில் நெறிப்படுத்தி அவர்களிடையே பொய்ப்பிரசாரங்களையும் மற்றும் இனவாதத்தைத் தூண்டக்கூடிய பிரச்சாரங்களையும் முடுக்கிவிட்டார்கள். 

ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்களின் கண்டிக்கான பாத யாத்திரையைத் தொடர்ந்து பண்டா-செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது. பின்னர் டட்லி-செல்வா ஒப்பந்தம் கைவிடப்பட்டது. அன்று ஏதேச்சதிகாரமாகச் செயற்பட்ட அரசியற் தலைமைகள் சிறுபான்மை இனத்தை இல்லாதொழிக்கவும், அவர்களின் இருப்பிடங்களை தமதாக்கிக் கொள்ளவும் மேற்கொண்ட முயற்சிகளின் பிரதிபலிப்பே இன்று பல்லாயிரக்கணக்கான தமிழ் சிங்கள மக்களின் உயிர்களைக் காவுகொண்டுள்ளது. அது மட்டுமல்ல.... இன்னும் பல்லாயிரக்கணக்கானவர்கள் உடலுறுப்புக்களை இழந்தவர்களாகவும் நடைப்பிணங்களாகவும் வாழுகின்ற ஒரு துன்ப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். வாழ்வாதாரங்களைத் தொலைத்துவிட்டு மற்றையோரின் தயவை எதிர்பார்க்கும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

இளைஞர் யுவதிகளின் வாழ்க்கையில் போரின் பாதிப்புக்கள் பல எதிர் நோக்கப்பட்டன.

பாரிய யுத்த நிகழ்வுகளின் விளைவாக இங்குள்ள இளைஞர் யுவதிகள் பதற்ற நிலைக்குள்ளானார்கள். அவர்கள் கல்வியின் பால் கவனம் செலுத்த முடியாமல் தத்தளித்தார்கள். அரச படைகளின் அட்டூழியங்களால் தமது வாழ்விடங்களில் வாழப் பயந்து பலர் உயிரைக் கையிற்பிடித்தபடி வெளிநாடுகளுக்கும், இலங்கையின் வேறு பாகங்களிற்கும் ஓடித்தப்பினர். ஏனையோர் பயந்து நடுங்கி வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்க வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டது. கல்வி பாதிக்கப்பட்டது. உடல்நிலை பாதிக்கப்பட்டது. உள்ளம் பாதிக்கப்பட்டது. பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.

கல்விமான்கள், சிறந்த ஆசிரியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அறிஞர்கள் எனக் கல்வியில் மேம்பட்ட அநேகர் மேலைத்தேய நாடுகளை நோக்கிப்  புலம்பெயரத் தொடங்கினர்.  மிஞ்சி எஞ்சியிருந்தவர்களும் பல்வேறு குழப்பங்களின் மத்தியில் தமது கடமைகளைச் செவ்வனே நிறைவேற்ற முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.

போர் உக்கிரத்தின் போது பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் முழு நேரமாகத் தம்மைப் போர் நடவடிக்கைகளில் ஈடுபடுத்திக்கொண்டதன் காரணமாக இளைஞர் யுவதிகளின் கல்விச் செயற்பாடுகள் சரிய ஆரம்பித்தன. 

பாடசாலைகளில் முறையான கல்வி புகட்டப்படவில்லை. பிரத்தியேகக் கல்விக் கூடங்கள் வியாபார நிலையங்களாக மாற்றப்பட்டன. அறிவு விலை பேசப்பட்டது. இந்த நிலையில் அடிப்படைக்கல்வி வசதி கேள்விக்குறியாயிற்று. இதற்கும் மேலாக பொழுதுபோக்குச் சாதனங்கள் தம் பங்கிற்கு மாணவர்களை கல்விச் செயற்பாடுகளில் இருந்து குழப்பி பொழுது போக்கு அம்சங்களில் கூடிய நாட்டத்தை ஏற்படுத்தத் தொடங்கின என்றார்.