இந்த அரசில் எல்லாம் நடைபெற்று விட்டன என்று கூற நான் பொய்யனும் அல்ல: முட்டாளும் அல்ல

இந்த அரசாங்கத்தில் எல்லாம் நடைபெற்று விட்டன என்று கூற முடியாது. அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள். அரசியல் தீர்வு கிடைத்து விட்டது என்றுசொல்ல வரவில்லை. அப்படிச் சொல்வதற்கு நான் பொய்யனும் அல்ல. முட்டாளும் அல்ல. அப்படிச் சொல்ல முடியாது.

ஆனால், அரசியல் தீர்வினை நோக்கிய நகர்வு இருக்கின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பும்தமிழ் முற்போக்கு கட்சியும் இணைந்து அரசாங்கத்தின் செயற்பாடுகளை தட்டிக்கேட்கின்றோம். வன்முறைகளை ஒதுக்கி விட்டு கலந்துரையாடல்களுக்கு இடம்கொடுக்க வேண்டுமென நினைக்கின்றேன் எனத் தெரிவித்தார் தேசிய மொழிகள்,தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன்.

தேசிய மொழிகள் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் நாட்டின் அபிவிருத்திக்கு சகவாழ்வு மேம்பாட்டுக்கான ஊடகவியாளர்களின்  செயலமர்வு நேற்று திங்கட்கிழமை(19) யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் தேசிய மொழிகள் தேசிய சகவாழ்வு கலந்துறையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் செயலாளர் பரணவிதான தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

அடுத்த தலைமுறையினர் வன்முறைகளைக் கையிலெடுத்து விடுவார்களோ என்ற பயம் இருக்கின்றது. நாட்டில் இன்னொரு வன்முறை  இடம்பெற்று விடக் கூடாது. மீண்டும் ஒரு யுத்தம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர்கள் பிரச்சினை வந்துவிடக் கூடாது என நினைக்கின்றோம்.  

தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்ற எல்லாவிதமான தேவைப்பாடுகள் மற்றும் அபிலாசைகள் தொடர்பில்  தற்போதைய ஆட்சியாளர்கள் கவனம் செலுத்துயுள்ளனர். இது மாற்றத்தின் ஒரு அங்கம்.  கடந்த காலங்களில் இவ்வாறான நிலைமைகளில்லை. 

புதிய யுகத்தில் தமிழ் மக்களுக்கான பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். அந்த வகையில் சகவாழ்வு யுகம்  தமிழ்,சிங்கள,முஸ்லீம் மக்களுக்கிடையிலே ஏற்படுத்தப்படுத்தப்படவேண்டும் என்ற நோக்கில் நாம் இந்த சக வாழ்வுக் கலந்துரையாடலை ஏற்படுத்தியுள்ளோம் என்றார்.