சாவுக் களங்களைக் கண்டு மீண்டிருக்கின்றோம்!- திலீபனின் நினைவு நாளில் துளசி உரை (Video)

தியாக தீபம் திலீபனின் 29 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு நேற்றைய தினம் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் இடம்பெற்றது. 

அந்நிகழ்வில் பங்கேற்று ஜனநாயகப் போராளிகள் அமைப்பின் ஊடகப் பேச்சாளர் துளசி உரையாற்றுகையில் தெரிவித்த விடயங்கள் வருமாறு, 

கிளிநொச்சி நாங்கள் வாழ்ந்த மண். நாங்கள் ஆண்ட மண். தியாகி திலீபனை நினைவு கூருவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த போராளிகள் அனைவரும் அமைப்பின் கொள்கை உறுதிப் பிரமாணத்துக்கு அமைவாக தங்களை போர்க் களத்தில் அர்ப்பணிப்பதற்கு எந்த நேரமும் தயாராகவே இருந்தார்கள். 

இந்திய இராணுவத்தின் இலங்கை வருகையின் போது, அதன் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தியாகி திலீபன் அவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு தன்னை அர்ப்பணித்து இருந்தார். 

அதன் பின்னர் எழுச்சி பெற்ற ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்கால் மண்ணில் முடிவுறும் வரைக்கும்,  30 வருடங்களுக்கும் மேலாக தமிழ் அரசியல் பரப்பில் விடுதலைப் புலிகள் தமது ஆழமான பார்வையை செலுத்தி இருந்தனர். 

அதன் பின்னர் இந்த 7 வருடங்களில் தமிழர் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் அரசியல் பலமும் அற்றுப் போயுள்ள சூழலில் முன்னாள் போராளிகளாகிய நாங்கள் ஜனநாயகப் போராளிகள் என்கிற கட்சியை ஆரம்பித்து தமிழ் மக்களின் அரசியல் அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு ஆயத்தமாகி இருக்கிறோம். 

விடுதலைப் புலிகளால் கை காட்டப்பட்ட  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று தமிழர் அரசியலை சரணாகதி அரசியலுக்கு  கொண்டு போய் விட்டிருக்கின்றது என்பதனை உலகமும், தமிழ் மக்களும் நன்கறிவார்கள். 

இந்த அரசியலை அகற்றி தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான அபிவிருத்தியையும் நிலையான அரசியல் தீர்வையும் பெற்றுக் கொடுப்பதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். சாவுக் களங்களைக் கண்டு மீண்டிருக்கின்றோம். ஆகவே, எக்காலத்திலும் எதற்காகவும் எங்கள் உயிர்களைப் பற்றி நாங்கள் கவலைப்படப் போவதில்லை.