அரசின் முகவரான சத்தியலிங்கம் நடாத்தும் மருத்துவ முகாமில் கலந்து கொள்ள மாட்டோம்!- முன்னாள் போராளிகள் கொதிப்பு

இரசாயன ஊசி விவகாரம் தொடர்பில் வைத்தியப் பரிசோதனைக்கு முன்னாள் போராளிகள் தயக்கம் காட்டி வருவதாக வடமாகாண சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கும் நிலையில் இது தொடர்பில் முன்னாள் போராளிகள் தெரிவித்துள்ள கருத்துக்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. 

புனர்வாழ்வுக்கு உள்ளான முன்னாள் போராளிகளுக்கு இரசாயன ஊசி ஏற்றப்பட்டதாக  எழுந்த சர்ச்சையை அடுத்து முன்னாள் போராளிகளை வைத்தியப் பரிசோதனைக்கு உட்படுத்தும் திட்டம் வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது.

பிரதேச வைத்திய அலுவலகத்தின் ஊடாக முன்னாள் போராளிகளை பரிசோதிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போது அதற்கு முன்னாள் போராளிகள் பலர் ஆர்வம் காட்டவில்லை எனத் தெரியவருகிறது. 

இது தொடர்பில் முன்னாள் போராளிகள் மட் டத்தில் விசாரித்த போது, 

தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட எமது போராளிகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்திருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் தொற்றாநோய்களான  புற்றுநோய், ஈரல் அழற்சி, சுவாசப் பிரச்சினை  போன்றவற்றால் இறந்திருக்கின்றார்கள். 

இது தொடர்பிலான சர்ச்சைகள் உச்சக் கட்டத்தை அடைந்த போது, போராளிகளின் நலனில் அக்கறை கொண்ட தமிழ் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும், சிவில் சமூக மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும்  சர்வதேச நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ குழுவினரை இங்கே அழைத்து பரிசோதிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருந்தனர். எங்களுடைய விருப்பமும் அதுவாகத் தான் இருந்தது. ஆனால், அரசாங்கம் வடக்கு சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி சத்தியலிங்கத்தை சிபாரிசு செய்தது. 

எனவே, அரசாங்கம் சிபாரிசு செய்யும் ஒருவரில் எப்படி நாங்கள் நம்பிக்கை வைத்து பரிசோதனைக்கு சமூகமளிப்பது? மருத்துவ அறிக்கை உண்மைத் தன்மையாக வெளிவரும் என்பதற்கு என்ன உத்தரவாதம் உண்டு. சத்தியலிங்கத்தை நாங்கள் அரசின் ஒரு முகவராகவே பார்க்கின்றோம். 

இந்த அச்சம் காரணமாகவே அவர் அழைப்பு விடுத்த மருத்துவ பரிசோதனைக்கு நாங்கள் ஈடுபாடோ ஆர்வமோ காட்டவில்லை. நிபுணத்துவம் வாய்ந்த சர்வதேச மருத்துவக் குழுவினர் எங்களைப் பரிசோதிப்பார்களாக இருந்தால் முன்னாள் போராளிகளான நாங்கள் நம்பிக்கையையுடனும் விருப்பத்துடனும் கலந்து கொள்வோம்.