ஆயுதப் போரில் ஈடுபட்ட தம்பி பிரபாகரனை பிழையாக வழி நடத்தியது ஜனநாயகப் போரில் ஈடுபட்ட அரசியல் தலைவர்களே!- மனம் திறந்தார் சங்கரி

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட  பின்பு முதன்முறையாக தியாக தீபம் திலீபனின் 29 ஆம் ஆண்டு நினைவுதின நிகழ்வுகள் விடுதலைப் புலிகள் அமைப்பின் நடைமுறை நிர்வாக அரசின் தலைநகரமாக விளங்கிய  கிளிநொச்சி மண்ணில் இன்று உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று காலை 10.30 மணியளவில் திலீபனின் உருவப்படத்திற்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி அவர்களும், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி. வேந்தன், செயலாளர் கதிர் ஆகியோர் முதலில் ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். 

தொடர்ந்து மலர் வணக்கத்தை ஜனநாயகப் போராளிகள் கட் சியின் ஊடகப் பேச்சாளரும், அக் கட்சியின் முக்கியஸ்தருமான துளசி ஆரம்பித்து வைத்தார். 

தியாக தீபத்தின் நினைவு உரைகளை தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி, ஜனநாயக போராளிகள் கட்சியின்  செயலாளர் கதிர், ஊடகப் பேச்சாளர் துளசி ஆகியோர்  நிகழ்த்தினர். 

இந்த நினைவஞ்சலி நிகழ்வில் ஜனநாயக போராளிகள் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்களும், முன்னாள் போராளிகளும், பொதுமக்களும்  கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

இந்நிகழ்வில் பங்கேற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி உரையாற்றுகையில், 

மிகச் சரியான இடத்தில் இந்த நிகழ்வு இன்று இடம்பெறுகிறது. ஆரம்ப கால போராட்ட காலத்தில் புலிகள் அமைப்பின் தலைவராக இருந்த தம்பி பிரபாகரன் கூட இந்த அலுவலகத்துக்கு வந்து சென்றிருக்கிறார். தவிர, பல்வேறு போராளிகளின் கால்களும் இந்த இடத்தில் பதிந்துள்ளன. இனப்பிரச்சினையில் தீவிரமாக ஈடுபட்டு மரணித்தவர்கள் நினைவாக இந்த அலுவலகத்தை அர்ப்பணிக்க தயாராக இருக்கிறேன். 

திலீபனின் நினைவு நாளில் இதனை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.  இங்கு ஒரு சிலர் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் செத்து மடிய வேண்டுமென நினைக்கின்றனர். 

தப்பி வந்தால் துரோகிப் பட்டம் கட்டுகின்றனர். ஆனால், அப்படியல்ல. ஆயுதப் போராட்டமும், ஜனநாயகப் போராட்டமும் சமாந்தரமாக பயணிக்க வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளை ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டுள்ளேன் என்று நான் அப்போதே கூறியுள்ளேன். ஆனால், இந்தப் போராட்டம் சரியான திசையில் போக வேண்டும் என்பதற்காக சில தவறுகளை தம்பி பிரபாகரனுக்கு பல கடிதங்கள் மூலமாக சுட்டிக் காட்டியுள்ளேன். அவர்கள் எங்கள் பிள்ளைகள் போல... எனவே பிள்ளைகள் பிழை விடும் போது கண்டித்து அவர்களை திருத்த வேண்டும். எனவே. ஒரு அப்பா ஸ்தானத்தில் இருந்து தவறுகளைச் சுட்டிக் காட்டி அவர்களை வழிப்படுத்த முயன்று இருக்கிறேனே தவிர நான் ஒரு போதும் புலிகள் இயக்கம் அழிந்து போக வேண்டும் என்று  நினைத்ததில்லை. 

பிரபாகரனை புகழ்ந்து எழுதினாலோ அல்லது குற்றம் குறை கூறி எழுதினாலோ அந்தக் கடிதங்கள் அனைத்தையும் நான் ஊடகங்களின் பார்வைக்கு அனுப்பி வைத்திருக்கிறேன். என்னிடம் எந்த கள்ளம் கபடமும் இருந்ததில்லை. உண்மையில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட தம்பி பிரபாகரனை ஜனநாயகப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் தலைவர்கள் பிழையாக வழி நடாத்தினார்கள். இன்றும் கூட மக்களைப் பிழையாக வழி நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். 

விடுதலைப் புலிகள் கோலோச்சிய கிளிநொச்சி நகரம் இராணுவத்திடம் வீழ்ந்த போதே நான் போரின் போக்கை கணித்து போரை நிறுத்துவதற்கு முயற்சிக்குமாறு தம்பி பிரபாகரனிடம் கேட்டு இருந்தேன். அப்போதே தம்பியிடம் நீங்கள் மூன்று இலட்சம் மக்களின் சாபத்துக்கு ஆளாகப் போவதாக கூறியிருந்தேன். ஏனென்றால், போரில் இராணுவத்தின் கை ஓங்கி இருந்ததால் விடுதலைப் புலிகள் ஒரு தற்காலிக ஓய்வை எடுத்துக் கொண்டு தங்களை இராணுவ ரீதியாக இன்னும் பலமாக கட்டமைத்த பின்னர் இந்த விடுதலைப் போர் இன்னும் தொடர வேண்டும். அதில் புலிகள் வெல்ல வேண்டும் என நான் விருப்பப்பட்டிருந்தேன்.