ஆண்டு இறுதியில் எம்.பி பதவிகளை இராஜினாமா செய்வதற்கு சிவசக்தி ஆனந்தன் கடும் எதிர்ப்பு (Video)

யாழ்ப்பாணம் முற்றவெளித் திடலில் எதிர்வரும் 24.09.2016 சனிக்கிழமை அன்று இடம்பெறவுள்ள ‘எழுக தமிழ்’ பேரணிக்கு மக்களை ஒன்று கூட்டும் நோக்கத்தில் சிவில் சமுக அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு ஒன்று நேற்று சனிக்கிழமை மாலை வவுனியாவில் இடம்பெற்றிருந்தது.

தமிழ் மக்கள் பேரவையின் வவுனியா மாவட்ட அங்கத்தவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும், வவுனியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களும் பங்குபற்றியிருந்தனர்.

இங்கு கருத்துக்கூறிய வடக்கு மாகாணசபை உறுப்பினர் புளொட் ஜி.ரி.லிங்கநாதன்,

2016ம் ஆண்டு 31ஆம் திகதி இரவு சனிக்கிழமை நித்திரைக்கு போய், மறுநாள் காலை புதிய வருடத்தில் அதாவது 2017.01.01 ஞாயிற்றுக்கிழமை அன்று எழும்பும் போது, சம்பந்தன் ஐயா ஏற்கனவே கூறியிருப்பது போல இந்த மண்ணில் தீர்வு வந்திருக்க வேண்டும். 

இல்லாவிட்டால் கூட்டமைப்பில் இப்போதுள்ள சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் இனியும் மக்களை ஏமாற்றாமல் தமது இயலாமையை – ஆளுமை குறைபாட்டை, இராஜதந்திர தோல்வியை ஒப்புக்கொண்டு உடனடியாக தங்களது எம்.பி பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். 

இதன்போது குறுக்கிட்ட வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஜி.ரி.லிங்கநாதனின் கருத்துக்கு தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார். 

‘நாங்கள் ஏன் எம்.பி பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும்? 2016ம் ஆண்டு இறுதிக்குள் எமது மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுத்தருவோம் என்று நாங்கள் கூறவில்லையே. சம்பந்தன் ஐயா தான் கூறினவர். எனவே அவர் மட்டும் தான் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்’ என்று சிவசக்தி ஆனந்தன் கூறினார். 

இதற்கு தனது ஆட்சேபனையை தெரிவித்த ஜி.ரி.லிங்கநாதன், 

இந்த ஆண்டு இறுதிக்குள் நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுத்தருவோம் என்று சம்பந்தன் ஐயா கூறியபோது… நீங்கள் யாராவது இதற்கு மறுப்பு தெரிவித்து, ‘இந்தக் கருத்துக்கும் எங்களுக்கும் எந்தவித சம்பந்ததும் இல்லை. அது சம்பந்தன் ஐயாவின்ட தனிப்பட்ட கருத்து மட்டும் தான் என்று மக்களுக்கு தெளிவுபடுத்தி அறிக்கை ஏதும் விட்டனீங்களா? இல்லைத்தானே, 

அவரது தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டு தானே இப்பவும் கூட்டமைப்புக்குள்ள இருக்கிறீயள்? தேர்தல் கால கூட்டங்களில அவரையும் மேடையில இருத்தி வைச்சுக்கொண்டு தானே தேர்தல் விஞ்ஞாபனத்தை சொல்லி மக்களிடம் வாக்கு கேட்டனீங்கள்.

எனவே ஒருத்தர் மாறி ஒருத்தர் அவர் இவரில பழியைப் போடாமல் நாங்கள் எல்லோருமாக கூட்டமைப்பில் இருக்கும் பாராளுமன்ற – மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாட்டில் இருக்கிறோம். 

2016ம் ஆண்டு இறுதிக்குள் எமது மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்காமல் விட்டால் உடனடியாக தங்களது எம்.பி பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஜி.ரி.லிங்கநாதனின் இந்த வலியுறுத்தலுக்கு கூட்டத்தில் பங்குபற்றியிருந்தவர்கள் கை ஓசை எழுப்பி பெருத்த வரவேற்பு தெரிவித்தனர்.