நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றில் வழக்கு

போராட்டங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தைப் பயன்படுத்துவதோடு, உணர்ச்சி வசமான பேச்சுக்களைப் பேசி இளைஞர்களை தூண்டிவிடும் வேலையை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் செய்து வருகின்றார் என உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 

இது குறித்து தெரியவருவதாவது,

காவிரிப் நதி நீர்ப் பிரச்சினையில், கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து கடந்த 16-ம் திகதி நாம் தமிழர் கட்சியினர் பேரணி நடத்தினர்.

இப்பேரணியில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை செயலாளரான விக்னேஷ் என்ற இளைஞர் தீக்குளித்து இறந்தார்.

இந்நிலையில், 'நாம் தமிழர் கட்சி விதிமுறைகளை மீறி செயல்படுவதால் அக்கட்சியை தடை செய்ய வேண்டும்' என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக வழக்கறிஞர் ரீகன் கருத்து வெளியிடுகையில்,

'சீமானின் அலட்சியம்தான் விக்னேஷ் உயிரிழப்புக்குக் காரணம். எந்தவொரு போராட்டம், பேரணி என்றாலும் சம்பந்தப்பட்ட அமைப்பும், அரசும் அந்த நிகழ்வை காணொளி ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவு உள்ளது.

ஆனால் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி நடத்திய பேரணியை சம்பந்தப்பட்ட யாரும் ஒளிப்பதிவு எடுக்கவில்லை.

மேலும் தடைசெய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படங்களையும், உணர்ச்சியைத் தூண்டக் கூடிய வகையிலான வாசகங்கள் தாங்கிய பதாகைகளையும் பேரணியில் வந்தவர்கள் ஏந்திச் சென்றுள்ளனர்.

தன்னுடைய அரசியல் ஆதாயத்துக்காக உணர்ச்சிகரமாகப் பேசி இளைஞர்களைத் தூண்டிவிடும் வேலையையே சீமான் செய்து வருகிறார்.

இதுவரை சீமானின் பேச்சுகளைப் பார்த்து வந்தவர்களுக்கு அது தெளிவாகப் புரியும். பேரணி நடத்துவதற்கான எந்தவொரு முறையான ஏற்பாடுகளையும் செய்யாமல், உணர்ச்சியைத் தூண்டி ஒரு உயிரைப் பலி வாங்கிவிட்டார்.

அவருடைய பேச்சுகளிலோ நடவடிக்கைகளிலோ எந்தவொரு நியாயமான அரசியல் நோக்கமும் இருப்பதாகத் தெரியவில்லை.

எனவே மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும்" என்றார் வழக்கறிஞர் ரீகன்.