செல்வச் சந்நிதி வாகனப் பாதுகாப்பு நிலையங்களில் நடந்த பகல் கொள்ளை

பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் விசேட திருவிழாக்களான தேர்த் திருவிழாவான நேற்று முன்தினம் வியாழக்கிழமை, தீர்த்தத் திருவிழாவான நேற்று வெள்ளிக்கிழமை ஆகிய தினங்களில் அங்கு அமைக்கப்பட்டிருந்த வாகனப் பாதுகாப்பு நிலையங்களில் மோட்டார்ச் சைக்கிள்களுக்கு அதிக தொகைக் கட்டணம் அறவிடப்பட்டமை தொடர்பில் ஆலயத்திற்கு வருகை  தந்த பக்தர்கள் பலரும் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர். 

குறிப்பாக ஆலயத்தின் மேற்குப் புறமாக அமைக்கப்பட்டிருந்த  விளையாட்டுக் கழகம் நடாத்திய வாகனப் பாதுகாப்பு நிலையமொன்றில் மோட்டார்ச் சைக்கிள் உரிமையாளர்களிடம் முச்சக்கர வண்டிக்குரிய 30 ரூபா பெறுமதியான பற்றுச் சீட்டு வழங்கப்பட்டுக் கட்டணம் அறவிடப்பட்டமை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  

அத்துடன் ஏனைய வாகனப் பாதுகாப்பு நிலையங்களிலும் வழமையாக அறவிடப்படும் கட்டணத்தை விட அதிகரித்த தொகையான 20 ரூபா வரை மோட்டார்ச் சைக்கிளுக்குக் கட்டணமாக அறவிடப்பட்டதுடன், குறித்த தொகைக்குரிய பற்றுச் சீட்டும் வழங்கப்பட்டது. 

அதேபோன்று வாகனப் பாதுகாப்பு நிலையங்களில் பாதுகாப்பிற்காக வைக்கப்படும் தலைக் கவசம் ஒவ்வொன்றிற்கும் தலா-10 ரூபா வீதமும் கட்டணமாக அறவிடப்பட்டது. இவ்வாறு தலைக் கவசத்திற்கு மேலதிக கட்டணங்கள் அறவிடப்பட்டமை தொடர்பிலும் பலராலும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமை தொடர்பிலும் பெரும் விசனம் எழுந்துள்ளது.