யாழ்.மாவட்டச் செயலகத்தில் புதிய நிர்வாக அலகுகளை உள்ளடக்கிய மூன்று மாடிக் கட்டடத் தொகுதியைத் திறந்து வைத்த பிரதமர்

பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் பணிப்பின் பேரில் உள்நாட்டலுவல்கள் பொதுநிர்வாக அமைச்சின் நிதிப் பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்ட யாழ். மாவட்டச் செயலகத்திற்கான புதிய நிர்வாக அலகுகளை உள்ளடக்கிய மூன்று மாடிக் கட்டடத் தொகுதியைத் திறந்துவைக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை(17) முற்பகல் யாழ். மாவட்டச் செயலகத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது.

யாழ். குடாநாட்டிற்கு வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குப்  பொன்னாடை போர்த்தி,மங்கள ஆராத்தி எடுத்து, தமிழ்ப்  பண்பாட்டைப்  பிரதிபலிக்கும் வகையிலான வாத்தியங்கள் முழங்க யாழ். மாவட்டச் செயலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். 

இந்  நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு புதிய நிர்வாகக் கட்டமைப்பினை  உத்தியோகபூர்வமாகத்  திறந்துவைத்தார்.  இந்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் , சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ. சுமந்திரன், டக்ளஸ் தேவானந்தா உட்படப் பலரும் கலந்து கொண்டனர். 

யாழ். மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 432 கிராம சேவையாளர்கள் பிரிவுக்குட்ட மக்களின் தேவைகளுக்காக இந்த மூன்று மாடிக்கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. 

இதன், கட்டுமானப் பணிகள்  கடந்த 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு கடந்த மாதம்  நிறைவடைந்து இன்று மக்களின் தேவைகளுக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 78 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் கட்டடப்பணிகள் பூர்த்தியாக்கப்பட்டுள்ளன .

இங்கு நவீன மயமாக்கப்பட்ட உள்நாட்டு அலுவல்களின் இணைப்பு அலுவலங்கள் மற்றும் ஏனைய துறைசார்ந்த அமைச்சுக்களின் கிளைகள் போன்றன அமைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.