ஆளுநர்கள் ஆள்பவர்களாக மாறிவிடக்கூடாது!- முதலமைச்சர் உரை

மாகாணங்களைப் பரிபாலிக்கும் பொறுப்பு, நிர்வகிக்கும் அதிகாரம், மாகாண மக்கட் பிரதிநிதிகளுக்கே வழங்க வேண்டும். இந்திய நாட்டின் அதிகார அலகுகளின் ஆளுநர்கள் போலவே இங்கும் ஆளுநர்கள் ஆளுநர்களாகவே இருக்க வேண்டும். ஆள்பவர்களாக மாறிவிடக்கூடாது. இவ்வாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின்புதிய நிர்வாகக் கட்டிடத் தொகுதித் திறப்பு விழாவும், நினைவுக்கல் திரைநீக்கம் செய்தலும்இன்று அதாவது 17.09.2016 சனிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கௌரவ வஜிர அபயவர்த்தன அவர்கள், மீள்குடியேற்ற அமைச்சர் கௌரவ சுவாமிநாதன் அவர்கள், இராஜாங்க அமைச்சர் கௌரவ விஜயகலா மகேஸ்வரன் அவர்கள், கௌரவ மாவை சேனாதிராஜா அவர்கள், மற்றைய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், கௌரவ வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மற்றும் உறுப்பினர்கள், மற்றும் யாழ்.அரச அதிபர் நா. வேதநாயகன் அவர்கள், அரச, மாகாண உயர் அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இங்கு முதலமைச்சர் உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது,

யாழ்மாவட்டச் செயலகத்தில் 4 மாடிகளைக் கொண்ட புதிய நிர்வாகக் கட்டடத் தொகுதியொன்று கட்டி நிறைவு செய்யப்பட்டு இன்று அதன் திறப்பு விழாவும், நினைவுக் கல் திரை நீக்கமும் வெகு விமர்சையாக இந்த நாட்டின் பிரதம மந்திரியினால் ஆற்றுப்படுத்தப்பட்டுள்ளன.

அதனைக் கட்டித்தர உதவிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ வஜிர அபயவர்த்தன அவர்களுக்கும் திரை நீக்கம் செய்த எமது பிரதமருக்கும் முதற்கண் எங்கள் மக்கள் சார்பில் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

1987ம் ஆண்டின் இந்திய இலங்கை உடன்பாட்டின் அடிப்படையிலும் அப்போதைய 13வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலும் அரசாங்க அதிபர்களும் மாவட்ட செயலாளர்களும் மாகாண நெறிப்படுத்தலின் கீழ் இருந்தார்கள். அம்முறை 1992ல் மாற்றப்பட்டது.

திருத்தங்கள் நடைபெற்று திருத்தப்பட்ட அரசியலமைப்பு அல்லது புதிய அரசியலமைப்பு வெகுவிரைவில் வரவிருக்கும் நேரத்தில், அதிகாரப்பரவலாக்கல் ஆரோக்கியமாக நடைபெறும் என்று நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில், பல் நிர்வாக அலகுகளை நீக்கி ஒற்றுமைப்பட்ட ஒரே மாகாண நிர்வாகம் நடைபெற கௌரவ பிரதமர் அவர்கள் வழிவகுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

மாகாணங்களைப் பரிபாலிக்கும் பொறுப்பு, நிர்வகிக்கும் அதிகாரம், மாகாண மக்கட் பிரதிநிதிகளுக்கே வழங்க வேண்டும். ஆளுநருக்கு ஒரு அதிகார அலகு, மாவட்ட செயலாளர்களுக்கு ஒரு அலகு, எமக்கு இன்னொரு அலகு என்றிருந்தால் மாகாணம் உருப்படாமல் போய்விடும். முரண்பாடுகளே மிஞ்சும். இவற்றைத் தவிர்ப்பதென்றால் இந்திய நாட்டின் அதிகார அலகுகளின் ஆளுநர்கள் போலவே இங்கும் ஆளுநர்கள் ஆளுநர்களாகவே இருக்க வேண்டும். ஆள்பவர்களாக மாறிவிடக்கூடாது.

இன்று மூன்று அதிகார அலகுகள் வடமாகாணத்தில் நடைமுறையில் இருக்கின்றன. ஆளுநர் அதிகார அலகு, அரசாங்க அதிபர்கள் அதிகார அலகு, மூன்றாவது மாகாண அலகு. முதல் இருவரும் முறையே ஜனாதிபதியின் முகவராகவும் மத்திய அரசாங்கத்தின் நெறிப்படுத்தலுக்கு உட்பட்டவர்களாகவும் இருப்பதால் கூடிய அதிகாரங்களை அவர்களே பரிபாலிக்கக் கூடியதாக உள்ளது.

உண்மையில் மாகாணங்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுக்கும் எண்ணம் மத்திக்கு இருந்தால் முழுமையான அதிகார பீடமாக மாகாணசபையை மாற்ற வேண்டும். மத்திக்கும் மாகாணத்திற்கும் ஒருங்கியலும் நிரல் என்ற Concurrent List ஒன்று இருக்கக் கூடாது. அவ்வாறு இருப்பதால் மாகாணத்தின் அதிகாரங்களை மத்தியே பிரயோகிக்கத் தலைப்படுகின்றது.

ஆகவே மத்திக்கும் மாகாணத்திற்கும் அவற்றின் அதிகாரங்கள் மிகத் தெளிவாக நிர்ணயிக்கப்பட்டு ஒரே விடயம் சம்பந்தமாகப் பலர் அதிகாரம் செலுத்தும் நிலையை நாங்கள் தவிர்த்துக் கொள்ளுவோமாக!

உதாரணத்திற்கு அண்மையில் முதலீட்டாளர்களை வரவேற்று இங்கு அவர்களின் பெயர்களைப் பதிவு செய்ய கௌரவ ஆளுநர் அவர்கள் நடவடிக்கை எடுத்திருந்தார். அதற்கு நான் எதிர்ப்பாளன் அல்ல.

ஆனால் நாங்கள் மாகாணத்தின் தேவைகள் பற்றி ஒரு முறையான தேவைக் கணிப்பைப் பல் நிறுவனங்களின் ஒத்தாசையுடன் செய்ய விழையும் நேரம் எமது தேவைகள் என்னென்ன எவ்வாறான முதலீடுகள் எமக்கு எந்தெந்தத் துறை சம்பந்தமாக அவசியம்,

எங்கெல்லாம் எவ்வாறான செயற்திட்டங்கள் நிறுவலாம் என்றெல்லாம் ஆராயாமல் வெறுமனே முதலீட்டாளர்களை வர அனுமதிப்பதால் திட்டமிட்ட நிரந்தர அபிவிருத்திக்கு முட்டுக்கட்டைகள் போட்டவர்களாவோம் என்ற கருத்தைக் கூறி வைத்தேன்.

உண்மையில் 2013ம் ஆண்டு நாங்கள் பதவிக்கு வந்த உடனேயே இவ்வாறான ஒரு பல்தேவைக் கணிப்பை ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதியிடம் கேட்டிருந்தோம். அதற்கு அப்போதைய வதிவிடப் பிரதிநிதி தமது ஒப்புதலைத் தந்துவிட்டு அவ்வாறு செய்யாது மிகக் குறுகிய ஒரு கணிப்பையே மேற்கொண்டார். அதற்குக் காரணம் அவருக்கு அப்போதைய அரசாங்கம் கொடுத்த நெருக்குதல்கள்.

முழுமையான தேவைகள் கணிப்பை முன்னைய அரசாங்கம் விரும்பவில்லை. அதனால்த்தான் இத்தனை கால தாமதத்தை நாங்கள் எதிர் நோக்கியிருந்தோம். எங்கள் பிரதம மந்திரிதான் தற்போதைய சகல மட்டத் தேவைகள் கணிப்புக்கு வழி அமைத்துத் தந்துள்ளார். அவருக்கு எமது மனங்கனிந்த நன்றிகள் உரித்தாகுக.

அதுமட்டுமல்ல. இங்கிலாந்து உள்ளூர் சபையொன்றுடன் Twinning என்ற இரட்டைத் தொழிற்பாட்டு உடன்பாடொன்றை நடைமுறைப்படுத்தவும் அவரே வழி அமைத்துக் கொடுத்துள்ளார். சென்ற வருடம் ஜூலை மாதத்தில் நான் தொடங்கிய கைங்கரியம் அடுத்த மாதம் நடைமுறைக்கு வர இருக்கின்றது.

ஆகவே 2003ல் இதே பிரதமர் உருவாக்கிய ஒரு பல் நிறுவன பல்துறைசார்ந்த தேவைகள் கணிப்பின் அடிப்படையில் தயாரிக்கப்படும் புதிய கணிப்பொன்றின் பின்னரே எமது தேவைகளுக்கு ஏற்றவாறு முதலீடுகள் நடைபெற வேண்டும் என்று கருதினோம்.

உடனேயே பல முதலீட்டாளர்களை இங்கு கொண்டுவர எத்தனித்தல் மாட்டுக்கு முன் கரத்தையைக் கட்டுவதாக முடியும் என்று தெரிவித்திருந்தேன்.

எமக்குப் போதிய நீர் இல்லை. வடிகால் வசதியில்லை. மனித வளங்கள் தேர்ச்சி பெற்றவர்களாக்கப்பட வேண்டும். இந்த நேரத்தில் முதலீட்டாளர்களை இங்கு கொண்டு வந்தால் குழப்பங்களே மிஞ்சும், குறைபாடுகளே வெளிச்சமாவன என்று கருதினேன்.

ஆகவே தான்தோன்றித்தனமாக அபிவிருத்திகளில் இறங்குவதை நாங்கள் விரும்பவில்லை. சென்ற கிழமை ஒரு சிங்கள முதலீட்டாளர் எம்மைச் சந்தித்தார். நாம் அவருக்கு சகல உதவிகளையும் அனுசரணைகளையும் வழங்கி வருகின்றோம். அவர் ஒரு விடயத்தைப் பகிரங்கமாகவே கூறினார்.

எம்முடன் தொடர்புகள் வைத்திருக்கத் தமக்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் இதே செயற்திட்டத்தைத்தான் 2011ம் ஆண்டு கொண்டு வந்தபோது ஒரு பெருந்தொகைப்பணத்தை மத்திய அமைச்சர் ஒருவர் இனாமாகத் தமக்குத் தந்தால்த்தான் அனுமதி அளிக்க முடியும் என்று கூறியதாகவும் தான் அதற்கு இசையவில்லை என்றும் கூறினார்.

ஆகவே எமது தேவைகளையும் ஏழ்மையையும் பாதிப்புக்களையும் முன்வைத்து மத்திய அரசாங்கத்தில் உள்ளோர் வியாபாரம் செய்வதை நாங்கள் கண்டிக்கின்றோம். எமது தேவைகளைத் தாமே தான்தோன்றித் தனமாக நிர்ணயிப்பதையும் முதலீடுகளுக்குத் தமக்கு முற்பணம் தரவேண்டும் என்று லஞ்ச ஊழல்களில் ஈடுபடுவதையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

மத்தியானது எமக்கு ஒரு தந்தை போன்றிருந்து அனுசரணை வழங்க வேண்டும் என்று விரும்புகின்றோம். எமது கடமைகளை அவர்கள் போட்டிழுத்துக் கொண்டு தமக்கென வேறொரு நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதை நாம் எதிர்க்கின்றோம்.

ஜனநாயகம் என்றால் மக்கள் விருப்பு என்று பொருள்படும். ஆகவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே தேவைகளையும் செயற்திட்டங்களையும் நிர்ணயிக்க வேண்டும். வேற்று மாகாணங்களைச் சேர்ந்த மத்திய மக்கட் பிரதிநிதிகளாலோ, எமது மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநராலோ, அதிகார மட்ட அலுவலர்களாலோ எம்முடன் கலந்தாலோசிக்காமல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஈற்றில் எமக்குப் பாதிப்புக்களையே விளைவிப்பன.

ஆர அமர சிந்திக்காது பணத்திற்கு ஆசைப்பட்டு பின்னணி தெரியாத முதலீட்டாளர்களைப் பெருவாரியாக இங்கு கொண்டு வருவது எமக்குக் கால ஓட்டத்தில் கடும் பாதிப்புக்களையே ஏற்படுத்துவன. சமூக சீர்குலைப்புக்களை ஏற்படுத்துவன.

மேலும் சமாதானத்தைக் கட்டி எழுப்ப ஐக்கிய நாடுகள் பணம் தந்து உதவியுள்ளது. எம்முடன் கலந்தாலோசிக்காமால் எமது தேவைகளை எம்மிடம் இருந்து தெரிந்து கொள்ளாமல் அதற்கான அச்சுவார்ப்புரு (Matrix) தயாரிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை கண்டறிவது வேறு, மத்தியால் நியமிக்கப்படும் அலுவலர்களின் கருத்துக்களை அறிந்து செயற்படுத்துவது வேறு. அலுவலர்கள் தொழிற்திறனை நாடுவார்கள். கொள்கை ரீதியாக மக்களின் நிலை கண்டு அல்லது அவர்கள் தேவைகருதிச் செயற்பட வேண்டியவர்கள் அல்ல அவர்கள்.

அத்துடன் மத்திக்கு இசையாவிடில் தண்ணீர் இல்லாக் காட்டுக்கு அனுப்பப்பட்டு விடுவார்கள் என்று பயமும் அவர்களுக்கு உண்டு.

ஆகவே அரசாங்க அதிபரின் நிர்வாகக் கட்டடங்களை ஆக்கிக் கொடுப்பதை நாங்கள் வரவேற்கின்றோம். கட்டுமானங்களைக் கட்டி எழுப்புவதை நாங்கள் வரவேற்கின்றோம். அதே நேரத்தில் அகலமான அதிகாரப் பரவலாக்கலானது அத்தியாவசியம் என்ற கருத்தையும் எமது மாண்புமிகு பிரதமருக்கும் எமது அன்புக்குப் பாத்திரமான அமைச்சருக்குந் தெரியப்படுத்துகின்றோம்.

எமது குறைபாடுகள் யாவற்றையும் கொட்டித் தீர்க்கும் ஒரு சந்தர்ப்பமாக இன்றைய நிகழ்வை மாற்றுவதற்கு எனக்கு விருப்பமில்லை. எங்கள் சம்பந்தமான விடயங்களில் எம்முடன் ஆரம்பத்திலிருந்தே கலந்தாலோசியுங்கள் என்று கூறுவதே எனது முதல் வேண்டுகோள்.

இப்பொழுது தீர்மானங்கள் மத்தியிலேயே எடுக்கப்படுகின்றன. எம்முடன் கலந்தாலோசிப்பது இல்லை. அவர்கள் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அனுசரணையாக எமது அலுவலர்கள் அழைக்கப்படுகின்றார்கள்.

அரசாங்க அதிபர், மாவட்டச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் ஏன் எங்கள் பிரதம செயலாளர் போன்றோர் அழைக்கப்படுகின்றார்கள். எமது மக்கள் நலனை அவர்களைக் கொண்டு மத்தி தான் வேண்டியவாறு தீர்மானிக்கின்றது.

தொடக்கத்தில் இருந்தே இவ்வாறான செயற்திட்டங்கள், கொள்கைகள், நடைமுறைகள் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து அவற்றின் அடிப்படையில் தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் என்று கூறி இந்த நிகழ்வுக்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி கூறி என் சிற்றுரையை முடித்துக் கொள்கின்றேன்.