நான் வடக்கு; நீ கிழக்கு வேண்டாம் தமிழால் நாம் ஒன்றிணைவோம்!- முதலமைச்சர் அழைப்பு

தன்மொழி அறிந்தே பிறமொழி பாண்டித்தியம் பெறவேண்டும். இல்லையேல் நாம் கலப்பினக் காடையர்கள் ஆகிவிடுவோம் என தெரிவித்த வடக்கு மாகாண முதலமைச்சர்  சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்மொழி சார்ந்த எமது சமூக ஒருமைப்பாடே வடக்கு கிழக்கு மாகாணங்களின் சமரசத்திற்கும் சமஷ்டிக்கும் வழி அமைக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் முத்தமிழ் விழாவின் முதலாம் நாள் நிகழ்வு நேற்று முன்தினம் மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் அரங்கில் நடைபெற்றது. அதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே முதலமைச்சர் 

மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அவர் தொடர்ந்து உரையாற்றும் போது,

எமது அரசியல் விவகாரங்களில் அரசியல் தலைமைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும், அரசியல் திருத்த சட்டமூலங்களில் தமிழர்களின் வருங்கால நிரந்தர இருப்பை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் பரிந்துரைகளை மேற்கொள்வதற்கும் மற்றும் தமிழ் மக்கள் சார்ந்த இன்னோரன்ன விடயங்களில் தமிழ் மக்களுக்கு பக்க பலமாக நின்று உதவுவதற்கும் தமிழ் மக்கள் பேரவை என்ற ஒரு அமைப்பு உருவாகியது. 

அவர்களின் நோக்கம், அவர்கள் மேற்கொள்ளவிருந்த முயற்சிகளில் தெளிவுத் தன்மை காணப்பட்டது. ஒவ்வொருவிடயத்தையும் அலசி ஆராய்ந்து முடிவுகளை  மேற்கொள்ளக்கூடிய அறிவுசார் அங்கத்தவர்களைக் கொண்ட  சபையாக தமிழ் மக்கள் பேரவை மிளிர்ந்தது.

 இவர்களின் இந்த புதிய முய ற்சி தமிழ் மக்களின் விடிவுப் பாதைக்கான ஒரு உந்துசக்தியாக அமையும் என்ற காரணத்தினால் நானும் அந்த அமைப்புக்கு அனு சரணை வழங்க முன்வந்தேன். ஆனால் எக்காலத்திலும் ஒரு அரசியல் கட்சியாக மாற்றம் பெறக் கூடாது என்ற நிபந்தனையுடனேயே இணைந்து கொண்டேன்.

நான் என் நீதித்துறைப் பயணத்தில் காலடி பதித்ததே இந்த மட்டு மண்ணில்தான். புராதன இந்து ஆலயங்களில் ஏற்படும் சர்ச்சைகளை நீதிமன்றங்களுக்குச் செல்லாது மக்களே தமது பிணக்குகளைத் தீர்த்து வைக்கும் வகையில் ஒரு கட்டமைப்பை உருவாக்கி அதற்கான யாப்பையும் ஆக்கிக் கொடுத்தேன். 

ஆனால் சிறையில் சுமார் இரு வருடங்கள் மறியலில் இருந்த மாவை.சேனாதிராஜா, காசி ஆனந்தன் போன்றோருக்கு பிணை அளித்ததன் காரணமாக உடனேயே நான் சாவகச்சேரிக்கு மாற்றலாக்கப்பட்டேன். 37 வருடங்களின் பின்னர் பிறிதொரு கோலத்தில் உங்கள் முன் நிற்கின்றேன். மாற்றம் ஒன்றே மாநிலத்தின் மாறாத தோற்றம் என்றார் புத்த பகவான்.

எமது கலை, கலாசாரம், இலக்கி யம் அனைத்திற்கும் அடிநாதமாக விளங்குவது எமது மொழி. மொழி இன்றேல் கலை இல்லை, கலா சாரம் இல்லை, இலக்கியம் இல்லை. எம் பாரம்பரியத்திற்கான வடிவம் மொழியே. 

தமிழ்மொழியின் பயன்பாடு மற்றும் இலக்கியப் பிரயோகம் என்பன எமது இளைய சமூகத்தினரிடம் எவ்வாறான வளர்ச்சிப் பாதையில் செல்கின்றது என்பதை யும் அதன் பயன்பாடு சுமுகமான பாதையில் செல்லாது மருவிச் செல் கின்றது எனின் அதற்கான காரணங்களையும் அவற்றை சீர்படுத்தக் கூடிய வழிமுறைகளையும் ஆராய்ந் தால் நன்மை பயக்கும் என்று கருதுகின்றேன். 

தமிழ்மொழி என்பது உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றாகவும், செம்மொழி என்ற சிறப்பைப் பெற்ற இலக்கிய வளங் களைக் கொண்ட மொழியாகவும் அமைந்துள்ளது.

இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடிகளாக விளங்குபவை. இலட்சிய நோக்கம் கொண்டவை. ஆனால் இன்றைய இளைய சமு தாயம் தமிழ் இலக்கியத்தைப் புறக் கணித்து வருவது மனவருத்தத் தைத் தருகின்றது. எமது வீர வரலாற்றுக்  காவியங்கள் கவனிப்பாரற்று கிடப்பில் போடப்பட்டுள்ளன. அறநூல்கள் அநாதைகள் ஆகிவிட்டன.

ஆனால்  எமது புராதன இலக் கியத்தினுள் புதையல்கள் பொதிந்தி ருக்கின்றன என்பதை மட்டும் இங்கு கூறி வைக்கின்றேன். தமிழ் மொழியை ஐயந்;திரிபறக் கற்காமை ஒரு பாரிய பிரச்சினையாகத் தமிழ் மாணவ மாணவியரிடையே வளர்ந்து கொண்டு செல்வதை அவ தானிக்கக் கூடியதாக உள்ளது. வெறும் விற்பனைப் பொருளாகிவருகின்றது மொழி. 

தமிழ் இலக்கியத்தை முறை யாகக் கற்பிக்க ஆசிரியர்கள் இல்லாமையால்  கணிசமான மாணவர்கள் தமிழ் இலக்கியத்தைக் கைவிட்டு வருகின்றார்கள். இந்த விடயம் ஆழமாக ஆராயப்பட வேண்டியுள்ளது. பிறமொழிப் புலமை மாணவர்களை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும் என்பதில் ஐயம் இல்லை. 

தன்னை அறிந்தே பிறரை அறிய முற்பட வேண்டும். தன் மொழி அறிந்தே பிறமொழி பாண்டித்தியம் பெற வேண்டும். இல்லையேல் நாம் கலப்பினக் காடையர்கள் ஆகிவிடுவோம். தமிழை இலக்கணத் தமிழாகப் பேச வேண்டும் என்று நான் கூறவில்லை. கொச்சையாகப் பேசாதீர்கள் என்று தான் கூறுகின்றேன். 

இயற்கையுடன் இணைந்த இலக்கியச் சுவை என்பவற்றைத் தொலைத்துவிட்டு இன்று பொதுக் கொள்கைகளின் கீழ் இயங்க முற்பட்டுள்ளோம். அத்துடன் பழைய தமிழ் இலக்கியங்களைப் படித்துப் புரிந்து கொள்ளுதல் கடினம் என்ற மனப்பாங்கில் தமிழை ஒதுக்கி இலகுவான பாடங்களை இலகுவில் கற்க விரும்பும் பல்கலைக் கழக மாணவர்களின் போக்குக் கூட தமிழ்மொழிப் பிரயோகத்தின் பின்னடைவிற்கான காரணங்களில் சில என்று அடையாளம் காட்ட லாம். ஆகவே மொத்தத்தில் பல காரணங்கள் எமது மொழிப் பிரயோகத்தை வெகுவாகப் பாதித்துள் ளன எனலாம்.

இவ்வாறு மருவிச் சென்று கொண்டிருக்கும் தமிழ் மொழியின் தனித்துவத்தையும் அதன் இலக்கி யப் பாவனையையும் மீண்டும் ஒருமுறை கட்டியெழுப்பி உயரிய ஸ்தானத்தில் தக்க வைக்க முயற் சிப்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது. 

நாம் பார்வையாளர்களாக இருக் காது மொழி வளர்ச்சியில் எம்மை யும் பங்காளர்களாக இணைத்துக் கொள்ள வேண்டும்.

எம் தமிழினத்தை இனி ஒன்று படச் செய்யப் போவது அரசியல் இல்லை. எமது தமிழ்;, எமது தமிழ் இலக்கியம்;, எமது தமிழ்க் கலைகள்,  எமது தமிழ்ப் பாரம்பரியங்கள், எமது தமிழ் வாழ்க்கை முறை. எமது சமூக ஒருமைப்பாடே வட கிழக்கு மாகாணங்களின் சமரசத் திற்கும் சமஷ்டிக்கும் வழி அமைப் பன. 

இதுவரை காலமும் நாங்கள் பலவிதங்களில் எமது முரண்பாடு களையே முன்னிறுத்தி வந்துள் ளோம்.

நான் வேறு குடி, நீ வேறு குடி என்றோம். நான் வடக்கு,நீ கிழக்கு என்றோம், நான் விவசாயி, நீ மீன்பிடிப்பவன் என்றோம்;. நான் தமிழன், நீ முஸ்லிம் என்றோம். எம்மை எல்லாம் இனிமேலாவது தமிழ்மொழி நம் அனைவரையும் ஒன்றுபட வைக்கட்டும்! தமிழ் மொழி யின், அதன் இலக்கியத்தின், அதன் பாரம்பரியத்தின், அதன் இலட்சியத் தின் அழகில் இனி ஒன்றுபட முன் வருவோம்.

வேற்றுமைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் நாம் அன்பால் ஒன்றுபட முடியும். தமிழ் அழகால் ஒன்றுபட முடியும். இலக்கிய அறி வால் ஒன்றுபட முடியும். அந்த ஒற்றுமையை வட கிழக்கு மாகாண மக்களாகிய நாம் யாவரும் வர வேற்போம் என அவர் மேலும் தெரி வித்தார்.