சிறுத்தைகள் நடமாட்டம் - மக்கள் அச்சம் (Photos)

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மக்கள் செறிந்து வாழும் பிரதேசமான அட்டன் நுவரெலியா பிரதான வீதிக்கு அருகாமையில் குடாகம பகுதியில் அமைந்துள்ள குடாகம ஓயாவில் நீர் அருந்திக் கொண்டிருந்த சிறுத்தையும் அதன் குட்டிகள் இரண்டினையும் 16.09.2016 அன்று மாலை 5.00 மணியளவில் பொதுமக்கள் கண்டுள்ளதால் அப்பிரதேசத்தில் வாழும் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அட்டன் பொலிஸ் நிலையத்துக்கு தெரிவித்ததையடுத்து பொலிஸார் அவ்விடத்திற்கு வருகை தந்து அங்கு கூடியிருந்த மக்களை அவ்விடத்தை விட்டு விலகி செல்லுமாறு பணிப்புரை விடுத்ததுடன் வன விலங்கு அதிகாரிகளுக்கும் அறிவித்தனர்.

இச்சிறுத்தைகள் அருகிலுள்ள குப்பைக்குழியில் கொட்டப்படும் மாமிசக் கழிவுகளை உண்பதற்காக இப்பிரதேசத்துக்கு வருகை தருவதாகவும், இதனால் பாதையைப் பயன்படுத்தும் பொதுமக்கள் அச்சத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படும் அதேவேளை தேயிலை மலைகள் காடுகளாக மாறிவருவதை அடுத்தே சிறுத்தைகள் மக்கள் வாழும் பிரதேசத்தை நோக்கி வருகை தருவதாகவும் பொதுமக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.