பாடசாலையின் நலனினை மிகவும் மோசமாகப் பாதிக்கும் தென்னிந்தியத் திருச்சபையின் தலையீடுகள்

தென்னிந்தியத் திருச்சபையின் தலையீடுகள் பாடசாலையின் நலனினை மிகவும் மோசமாகப் பாதிக்கின்றன என்பதனை நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம் எனத் தெரிவித்துள்ள உடுவில் மகளிர் கல்லூரி பெற்றோர் சங்கம்  பாடசாலையின் ஆசிரியர்களாகத் திருச்சபைக்கு விசுவாசமான பாதிரிமார், அவர்களின் குடும்பத்தினைச் சேர்ந்தோர் மற்றும் உறவினர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். 

தென்னிந்தியத் திருச்சபையில் இருந்து பிரிந்து சென்று உருவாக்கப்பட்ட அமெரிக்கன் மிஷன் சபையினைச் சேர்ந்த பாதிரிமாரினையும் சபையாரினையும் மீளவும் தென்னிந்தியத் திருச்சபையினை நோக்கிக் கவருவதற்கான சலுகைகளாக‌ உடுவில் மகளிர் கல்லூரியின் ஆசிரியர் நியமனங்கள் கையாளப்படுகின்றன எனவும் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பில் கல்லூரியின் பெற்றோர் சங்கம் விடுத்துள்ள ஐந்து பக்க அறிக்கையின் முக்கிய சில பகுதிகள் வருமாறு,

ஆசிரியர் நியமனங்களின் மீது அதிபருக்கு இருந்த அதிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு திருச்சபையின் விருப்பு வெறுப்புகளே நியமனங்களிலே தீர்மானிக்கும் சக்திகளாக மாறியுள்ளன. இதன் காரணமாகக் கல்லூரியில் தற்போது கடமையாற்றும் ஆசிரியர்களிலே ஒரு பகுதியினர் பொருத்தமான கல்வி சார் தகைமைகளையும் தொழிற் தகைமைகளையும் கொண்டிராதவர்களாக இருக்கின்றனர். 

திருமதி ஷிராணி மில்ஸின் பதவி நீக்கத்தினை அடுத்து இந்த நிலைமை மேலும் மோசமடையலாம் என நாம் பயப்படுகிறோம். இதனால் பாடசாலையின் கல்வித் தரம் மிகவும் வீழ்ச்சி அடையக் கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

மிகவும் நேர்மையான முறையிலே தனது அதிபர் கடமைகளைக் கடந்த 12 வருடங்களாகச் செய்துகொண்டிருந்த திருமதி ஷிராணி மில்ஸ் அவர்களுக்குப் பதவி நீடிப்பு வழங்கக் கூடாது எனத் தென்னிந்தியத் திருச்சபையின் செயற்குழு மேற்கொண்டுள்ள முடிவானது பாடசாலையினையும், பாடசாலை மாணவிகளையும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்கும் என நாம் கருதுகிறோம். கல்வியிலும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் கல்லூரி திருமதி மில்ஸின் தலைமைத்துவத்தின் கீழ் சிறப்பாகச் செயற்பட்டு வந்தது. 

பெண்களைக் குடும்பத்திலும், சமூகத்திலும் அடக்கி வைத்திருக்க வேண்டும் எனக் கருதும் ஆண்மையவாத‌ சமூகத்திலே திருமதி ஷிராணி மில்ஸின் தலைமைத்துவம், மாணவிகள் பெண்கள் என்ற வகையிலே சமூகத்தின் ஆதிக்க மனப்பாங்குகளைக் கேள்விக்குட்படுத்துவதற்கு அவர்களுக்குத் துணிச்சலை வழங்கக் கூடிய ஒன்றாக இருந்தது. மாணவிகளின் ஆளுமை வளர்ச்சிக்கு அதிபர் திருமதி மில்ஸ் ஆற்றிய பங்களிப்பினைப் பெற்றோராகிய நாம் பாராட்டுகிறோம்.

திருமதி- ஷிராணி மில்ஸினை தென்னிந்தியத் திருச்சபை ஓய்வு பெறச் செய்த முறையானது மிகவும் வேதனை அளிப்பதாக எமக்கு இருக்கிறது. அவரை அதிபர் பதவிக்கு விண்ணப்பிக்கும்படி தென்னிந்தியத் திருச்சபையினைச் சேர்ந்த நிர்வாகிகளே அவரைக் கடந்த ஜூன் மாதத்திலே கேட்டிருக்கிறார்கள். திருச்சபையின் பேராயர் அவருக்குப் பதவி நீடிப்பு வழங்கப்படும் என வாய்மொழி மூலம் உறுதி அளித்திருக்கிறார். திருமதி மில்ஸுக்குப் பதவி உயர்வு வழங்கப்படும் எனப்  புதிதாக அதிபராகப் பொறுப்பேற்றுள்ள திருமதி-சுனீத்தா  ஜெபரட்ணத்துக்கும் ஆயர் கூறியுள்ளார். 

திருமதி -மில்ஸுக்குப் பதவி உயர்வு வழங்கப்படாதவிடத்து தானும் தனது மகளும் போராட்டத்திலே குதிப்போம் என திருமதி -சுனீத்தா ஜெபரட்ணம் அவர்களே.... மாணவிகளுக்குச் சொல்லியிருக்கிறார். இவ்வாறான நேர்மையற்ற செயற்பாடுகள் மூலம் திருச்சபையினைச் சேர்ந்தவர்களும், கல்லூரியின் புதிய தலைமையும், திருமதி ஷிராணி மில்ஸினை மட்டுமல்லாது பாடசாலையிலே கல்வி கற்ற மாணவர்களையும் ஏமாற்றியிருக்கிறார்கள். இதனைப் பெற்றோராகிய நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஒரு புகழ்பூத்த கல்லூரியின் நிர்வாகிகள் இவ்வாறு செய்துள்ளமை கல்லூரியின் நற்பெயருக்குக் களங்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான நேர்மையற்ற செயற்பாடுகளுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ கல்லூரியின் அதிபர் தேர்வுக்குழுவிலே அங்கம் வகித்த திருமதி- சாவித்திரி சுமந்திரன், செல்வி -விஜுலா அருளானந்தம், திருமதி சுகந்தி வைரசிங்கே, மற்றும் இந்தியாவினைச் சேர்ந்த‌ கலாநிதி அலெக்ஸாண்டர் ஜேசுதாசன் ஆகியோர் துணை போயிருக்கிறார்கள். இந்த நேர்மையற்ற செயற்பாடுகளை எதிர்த்து அமைதியாகப் போராடிய மாணவிகள் மீது கல்லூரி ஆசிரியர்களும் பாதிரி ஒருவரும் தாக்குதல் நடாத்தி இருக்கிறார்கள். இது மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். 

உடுவில் மகளிர் கல்லூரியில் கடந்த பல வருடங்களாகப் பல சீர்கேடுகள் இருந்து வந்திருக்கின்றன. பாடசாலை ஆண் மற்றும் பெண் ஆசிரியர்களிலே சிலர், விடுதிப் பணியாளர்களிலே சிலர், பிறழ்வான நடத்தைகளிலே ஈடுப்பட்டிருந்தார்கள். ஆண் ஆசிரியர்கள் பெண் மாணவிகளுக்குச் சில தகாத முறைகளிலே தண்டனை வழங்க முற்பட்டிருக்கிறார்கள். இதனால் மாணவிகளின் உளநலம் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்த விடயங்கள் அதிபர் ஷிராணி மில்ஸின் கவனத்துக்குப் பாடசாலை மாணவர்களினாலும் பெற்றோரினாலும் கொண்டு செல்லப்பட்ட போது அதிபர் இவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதனைக் கல்லூரியின் புதிய அதிபராகிய திருமதி சுனீத்தா ஜெபரட்ணமும் (முன்னாள் உப அதிபர்), புதிய உப அதிபராகிய திருமதி- ஜீவானந்தினி அமலதாஸும் பல வழிகளிலே தடுத்து நிறுத்த முயற்சித்தனர் என்பதனை மாணவர்களும், பெற்றோரும் நன்கு அறிந்திருந்தனர். திருச்சபையினர் இதனைக் கண்டும் காணாமல் இருந்து தவறு செய்பவர்களுக்குத் துணைபோயிருக்கிறார்கள். 

இப்படிப்பட்ட நியாயத்தினைக் கண்டுகொள்ளத் தவறிய இரண்டு பேரினது நிர்வாகத்தின் கீழே கல்வி கற்பதற்கு மாணவிகள் அச்சம் வெளியிட்டுள்ளார்கள். அந்த அச்சத்திலே உள்ள நியாயத்தன்மையினைப் பெற்றோராகிய‌ நாம் புரிந்துகொண்டுள்ளோம். தமது பிரச்சினைகளைத் தாம் சென்று சொல்லக்கூடிய ஒருவராகவும், தமது பிரச்சினைகளைக் கேட்டறிந்து தமக்குப் பாதுகாப்பினை வழங்கக் கூடிய பாடசாலைக்குள்ளிருக்கும்  ஒரே தலைவராக அவர்கள் ஷிராணி மில்ஸினை நோக்கினார்கள். எமது பிள்ளைகள் திருமதி ஷிராணி மில்ஸ் அதிபராகத் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என விரும்பிப் போராட்டத்திலே ஈடுப்பட்டமைக்கு இதுவும் ஒரு முக்கியமான காரணமாக அமைந்தது.

உடுவில் மகளிர் கல்லூரியில் மாணவிகளில் தொண்ணூறு வீதத்திற்கும் மேற்பட்டோர் சைவசமயத்தைப் பின்பற்றுவோர். அவர்கள் வழிபடுவதற்கு வழிபாட்டிடம் அங்கு இல்லை. கல்லூரியில் வழிபாட்டுரிமை மறுக்கப்படுகின்றமையினை நாம் ஒரு பிரச்சினையாகவே பார்க்கிறோம் என்றுள்ளது.