யாழில் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைக் குளிர்பானம் வழங்கி முடித்து வைத்த டக்ளஸ் எம்.பி

இந்தியாவின் தமிழ்நாட்டின் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டமையை வன்மையாகக் கண்டித்தும், இலங்கைத் தமிழ் மக்களுக்கு உரிய பாதுகாப்பினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் வடக்கின் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை(16)  காலை -09.30 மணி முதல் பிற்பகல்-04 மணி வரை யாழ். இந்திய துணைத் தூதரக அலுவலகத்திற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது. 

இலங்கைத் தமிழ் மக்கள் சார்பாக நடாத்தப்பட்ட இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் "கன்னடனே நிறுத்து உன் காடைத்தனத்தை!", " தாயகத் தமிழனில் கைவைத்தால்.... ஈழத் தமிழனுக்கு வலிக்குமடா!"  போன்ற சுலோகங்களும் இடம்பெற்றிருந்தன.   

உண்ணாவிரதம் இடம்பெற்ற இடத்திற்கு  இன்று பிற்பகல் விஜயம் மேற்கொண்டிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்  செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டதுடன் யாழ். இந்தியத் துணைத்தூதுவருடன் இணைந்து உண்ணாவிரதிகளுக்கு குளிர்பானம் வழங்கி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனர். 

உண்ணாவிரதப் போராட்டத்தின் நிறைவாக இன்று பிற்பகல் யாழ். இந்திய துணைத்தூதுவர் அ.நடராஐனிடம் கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.