மீன்பிடி வலை கேட்ட கடலோடியிடம் மாவீரரின் மரணச் சான்றிதழ் கேட்ட டெனிஸ்வரன் (Video)

யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்த மூத்த கடலோடியான காத்தலிங்கம் அண்ணாமலை வடமாகாண மீன்பிடி அமைச்சர் டெனிஸ்வரனிடம் மீன்பிடி வலையை தந்துதவுமாறு கேட்க நேரில் சென்ற போது வடக்கு மீன்பிடி அமைச்சரின் முட்டாள்தனமான பதிலால் விரக்தியுற்று, இதுவரை எவ்வித உதவிகளும் கிடைக்காத நிலையில் வாழ்ந்து வருகிறார். 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 

வடமராட்சி கிழக்கு வத்திராயன் வடக்கைச் சேர்ந்த கா. அண்ணாமலை, வன்னி இறுதி யுத்தத்தில் சிக்கி வாழ்வாதாரத்தை அடியோடு இழந்தவர். அவரது மூத்த மகன் விடுதலைப் போரில் வீர மரணம் அடைந்து விட்டார். தற்போது வடமராட்சி கிழக்கில் மனைவியும், மூன்று பெண் பிள்ளைகளுடனும் வாழ்வாதாரத்துக்காக கடுமையான போராட்டத்துடன் வாழ்ந்து வருகிறார். 

இந்த நிலையில் தினமும் கடலுக்கு சென்று மீன்பிடித்து வாழ்வாதாரத்தை ஓட்டி வரும் நிலையில், இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளினால் வலைகள் கடுமையாக சேதமடைந்து உள்ளதுடன், கடும் காற்றில் சிக்கி அவரது படகும் சேதமடைந்து உள்ளது.   

இந்நிலையில் தனது வாழ்வாதாரத்துக்காக மீன்பிடிக்க வலைகளை வழங்கி உதவுமாறு உதவி கேட்டு தனது ஒரு நாள் தொழிலையும் நிறுத்தி 38 கிலோமீற்றர் தூரம் பயணித்து யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மீன்பிடி அமைச்சின் அலுவலகத்துக்கு நேரில் சென்று கடிதம் மூலம் கோரிக்கை விடுத்த போது, அமைச்சரின் செயலாளர்  கடிதத்தை பெற்றுக் கொண்டதாக சீல் அடித்து விட்டு உள்ளே சென்று அமைச்சரை சந்தித்து கொடுக்குமாறு கூறியுள்ளார். 

அண்ணாமலையின் கடிதத்தை வாங்கிப் பார்த்த டெனிஸ்வரன் கூறிய பதில் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. மகன் மாவீரர் என்பதனை நீரியல்வளத் திணைக்களத்திடம் உறுதிப்படுத்தி வருமாறு அண்ணாமலையிடம் டெனிஸ்வரன் கூறியுள்ளார். 

அமைச்சர் டெனிஸ்வரன் அவர்களே, 

அண்ணாமலையின் மகன் மதன்ராஜ் மாவீரர் என்பதனை உறுதிப்படுத்துவதற்கு நீரியல் வளத்திணைக்களம் என்ன தமிழீழ மாவீரர் பணிமனையா? அல்லது விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகமா?

அடுத்தது இறப்பை உறுதிப்படுத்த நீரியல்வளத் திணைக்களம் என்ன இறப்பு, பிறப்பு பதிவுக் காரியாலயமா?

ஒரு நாள் தொழிலையும் நிறுத்தி விட்டு, நெடுந்தூரம் பயணித்து உதவி கேட்டு உங்களைத் தேடி வந்தவரிடம் நீங்கள் நடந்து கொண்ட முறை சரிதானா? 

மேலும், மகனின் மரணத்தை மாவீரர் என உறுதிப்படுத்தி வந்தால் 50,000 ரூபாய் பணம் தருவதாக அல்லவா கூறி இருக்கின்றீர்கள். போரில் இறந்தவர்களுக்கு பலவந்தமாக மரணச் சான்றிதழ் வழங்கும் அரசின் மறைமுக  முகவராக செயற்படுகின்றீர்களா?

அண்ணாமலையிடம் இருந்து கடிதத்தை பெற்றுக் கொண்டேன் என சீல் அடித்து விட்டு தங்களது ஆவணக் கோப்பில் வைக்காமல் மீண்டும் அந்தக் கடிதத்தை அவரிடமே கொடுத்ததன் மூலம் உங்களது அமைச்சின் வினைத்திறன், உங்கள் நிர்வாக செயற்றிறனில் உள்ள மிகப்பெரிய ஓட்டையை அல்லவா காட்டுகின்றது. 

நீங்களும் உங்கள் அமைச்சின் செயலாளர்களும் பொதுமக்களின் வரிப்பணத்தில் பல இலட்சங்களுக்கு சொகுசு வாகனங்களை வாங்கி பந்தா காட்டித் திரிபவர்கள் தானே.

திரும்பும் இடமெல்லாம் இணைப்பாளர்களை நியமித்துள்ளதாக ஊடகங்களுக்கு படம் காட்டும் நீங்கள் வடமராட்சிக்கான இணைப்பாளரை நேரில் அனுப்பியாவது இப்பிரச்சினைக்கு உரிய தீர்வினை பெற்றுக் கொடுப்பதனை விடுத்து முட்டாள்தனமாக அல்லவா நடந்து கொண்டிருக்கின்றீர்கள். 

குறித்த கடலோடி உங்களிடம் உதவி கேட்டு வந்து இன்றோடு ஒன்பது மாதங்கள் கடந்து விட்டன. மூன்று பெண் பிள்ளைகளுடனும் காற்றில் கூரைகள் தூக்கிச் செல்லப்பட்ட பிறகு, மழைக்கு ஒழுகும் இடிந்த வீட்டில்  பல்வேறு இன்னல்களுடன் வாழ்ந்து வரும் இந்த மாவீரர் குடும்பம் படும் அவஸ்தைகளை நீங்கள் கற்பனை செய்து கூடப் பார்த்ததுண்டா? 

போராளி மற்றும் மாவீரர் குடும்பங்களுக்கு உதவிகள் செய்வதாக ஊடகங்களில் படம் காட்டுவதை நிறுத்தி விட்டு இனியாவது அக்குடும்பங்களின் வீடு தேடிச் சென்று உதவுவீர்களா?

கடலோடி அண்ணாமலையின் ஒரே மகனான மதன்ராஜ் இன்று உயிருடன் இருந்திருந்தால் உங்களைப் போன்ற வாக்குப் பொறுக்கிகளிடம் தன் தந்தையைக் கையேந்த விடாமல் கௌரவமான நிலையில் வாழ வைத்திருப்பான். 

என்ன செய்ய? தன்னை, தன் குடும்பத்தை விடவும் இந்த மண்ணையும், மக்களையும் அதிகமாக நேசித்தததால் நெடுந்தீவுக் கடற்பரப்பில் நடந்த சிறீலங்கா கடற்படையினருடனான நேரடி மோதலில் பங்கேற்று 26.12.2007 அன்று வீரச்சாவையல்லவா அடைந்து விட்டான்.  

இந்த மாவீரன் போன்று இந்த மண்ணுக்காக உச்சபட்ச தியாகத்தை செய்துள்ள பல்லாயிரம் மாவீரர்களின் அர்ப்பணிப்பும் தியாகமும் தான் உங்களைப் போன்ற அரசியல் வியாதிகளுக்கு சொகுசு கார், பங்களா, அமைச்சுப் பதவிகளை பெற்றுத் தந்திருக்கின்றது என்பதனை மறந்து  விடாதீர்கள். 

அன்று போராளி மதன்ராஜ் உடன் வாழ்ந்து இன்று புலம்பெயர்ந்து வாழும் போராளி நண்பர்களே நீங்கள் நிச்சயம் அந்தக் குடும்பத்துக்கு உதவுவீர்கள் என்ற நம்பிக்கை எமக்கு நிறையவே உண்டு.