தமிழர்களைக் காக்குமாறு இலங்கைத் தமிழ்க் கட்சிகள் மோடிக்கு கடிதம்

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் வாழும் தமிழர்களை பாதுகாக்குமாறு வலியுறுத்தி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, இலங்கையிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து, கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர். 

காவிரி நதியிலிருந்து அதிகளவு நீரை திறந்து விடுமாறு, கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டமையால், அம்மாநிலத்தில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்றன. குறிப்பாக, அங்கு வாழும் தமிழர்கள் மீது, வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இலங்கையில், தமிழர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போது, எமக்காக குரல் கொடுத்தவர்கள், தற்போது துன்பத்துக்கு உள்ளாகியுள்ளார்கள். 

அவர்களைக் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும். அந்த வகையில், கர்நாடகாவில் வாழும் தமிழர்களைப் பாதுகாக்கக் கோரி, இந்தியப் பிரதமருக்கு கடிதம் அனுப்புவதாக, ஏழு தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதநிதிகள், யாழ்ப்பாணத்திலுள்ள விடுதியொன்றில் புதன்கிழமை (14) மாலை கூடிக் கலந்துரையாடிய போது தீர்மானித்தனர். இதன் பிரகாரம், நேற்று வியாழக்கிழமை இரவு 7 மணியளவில், யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்திடம், மேற்படி கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது. 

இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் குலநாயகம், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி சார்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், புளொட் அமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், டெலோ சார்பில் சட்டத்தரணி ஸ்ரீகாந்தா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஈ.பி.டி.பி சார்பில் வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா, தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் அதன் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில், இளங்கோ மற்றும் தமிழர் பண்பாட்டு இயக்கத் தலைவர் மறவன்புலோ சச்சிதானந்தம் ஆகியோர் இணைந்தே, இக்கடிதத்தை அனுப்பி வைத்துள்ளனர்.