செல்வச் சந்நிதியில் வியாபார நடவடிக்கைக்காக பக்தர்களிடம் கெஞ்சி மன்றாடும் சின்னம் சிறுசுகள்

வரலாற்றுச் சிறப்பு மிக்க தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று வியாழக்கிழமை(15) இடம்பெற்ற நிலையில் ஆலயச் சூழலிலும், அதனை அண்டியுள்ள பகுதிகளிலும் பெருமளவு சிறுவர் தொழிலாளர்கள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததைக் காண முடிந்தது. 

காலை-06 மணி முதலே சின்னம் சிறுவர்கள் கற்பூரம் விற்றல், கச்சான் மற்றும் ஏனைய பொருட்கள் விற்பனையிலோ ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

குறிப்பாக அச்சுவேலி வீதியூடாகச் சென்று தொண்டமானாறு வழியாக ஆலயத்தைச் சென்றடைவதற்கு அமைக்கப்பட்டிருந்த மண் பாலத்தில் பல சிறுவர்கள் மேற்படி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததைக் காண முடிந்தது. 

இந்த மண் பாலத்தில் கற்பூர வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சுமார்-10 வயது மதிக்கத்தக்க சிறுவன் சில கற்பூரப் பெட்டிகளைக் கைகளில் வைத்துக் கொண்டு ஆலயத்திற்குச் செல்லும் அடியவர்களிடம் கற்பூரம் வாங்குமாறு கெஞ்சி மன்றாடிய காட்சி பலரது மனங்களையும் கரைய வைத்தது. இது போன்று வேறு சிறுவர்களும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

இன்றைய தேர்த் திருவிழாவை முன்னிட்டு 50 இற்கும் மேற்பட்ட பொலிஸார் ஆலயச் சூழலில் பாதுகாப்புக் கடமையிலிருந்த போதும் உரிய நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் பலரும் கடும் விசனம் வெளியிட்ட நிலையில் தேர் இருப்பிடத்திற்கு வந்த பின்னர் முற்பகல்-11 மணியளவில் சிறுவர் தொழிலாளர்களை வியாபார நடவடிக்கையில் ஈடுபடுத்தினால் அவ்வாறு ஈடுபடுத்துபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. எனினும் அதன் பின்னரும் ஆங்காங்கே சிறுவர் தொழிலாளர்கள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததைக் காண முடிந்தது.