யாழ். மாவட்ட இராணுவத் தளபதியின் கருத்துக்கு வலி. வடக்கு மீள்குடியேற்றச் சங்கத் தலைவர் கடும் கண்டனம்

யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் விடுவிக்கப்படவேண்டிய 4419 ஏக்கர் நிலப் பகுதியில் ஓரங்குலம் கூட விடுவிக்க முடியாது எனத் தெரிவித்திருக்கிறார். கடந்த காலங்களில் குடாநாட்டிற்கு விஜயம் செய்த  ஜனாதிபதி மீள்குடியேற்றத்தைப் பூரணப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும், உடனடியாகக் குறித்த நிலங்கள் விடுவிக்கப்படும் எனவும், இதற்கெனத் தனக்கு ஆறு மாத காலம் வரை கால அவகாசம் வழங்குமாறும் கேட்டிருந்தார். இதன் பிரகாரம் எமது மக்கள் பொறுமை காத்து வந்த நிலையில் தற்போது இராணுவத் தளபதி புதியதொரு கருத்தை வெளியிட்டுள்ளமை மன வேதனையைத் தருகிறது எனத் தெரிவித்தார் வலி. வடக்கு மீள்குடியேற்றச் சங்கத் தலைவர் எஸ். சஜீவன். 

யாழ்ப்பாணத்திலும், பலாலி இராணுவப் பிரதேசத்திலும் இராணுவத்தினரிடமுள்ள 4419 ஏக்கர் காணிகளில் ஒரு அங்குலமேனும் திருப்பிக் கொடுக்கப்பட மாட்டாது என யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க ஆங்கில நாளிதழொன்றுக்குக் கருத்து வெளியிட்டுள்ளார். குறித்த கருத்துக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காக ஜனாதிபதி பல்வேறு வகைகளிலும் தனது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள சூழலிலும், தற்போது ஜெனிவாவின் 31 ஆவது கூட்டத் தொடர் நடைபெறுகின்ற நிலையிலும் இராணுவத் தளபதி இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி எங்கள் மக்கள் காணிகளை விடுவிப்பதாகத் தெரிவித்து ஆறு மாதங்கள் கடந்திருக்கிறது. ஆனால், இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. 

புதிதாகப் பதவியேற்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலத்திலும் கடந்த காலத்தில் மகிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக் காலத்தில் இருந்தது போன்ற ஒரு நிலைமையே தொடர்ந்தும் நீடித்து வருகிறது. இவ்வாறான நிலையில் இனியும் நாங்கள் பொறுமை காப்பதற்குத் தயாரில்லை.  தொடர்ந்தும் இராணுவம் எங்களுடைய நிலப் பரப்புக்குள் குடியிருக்க நாங்கள் அனுமதிக்க முடியாது. எனவே, இராணுவம் எங்களைச் சுட்டுக் கொன்றாலும் பரவாயில்லை.... சொந்த நிலப் பரப்புக்குள் அத்துமீறி நுழைவதற்குத் தயாராகவிருக்கிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.