கோவணத்தோடு நாம் நின்றாலும் உனக்கொரு கோபுரம் கட்டியுள்ளோம்

காலடியில் இருக்கிற எனக்கு

உன்னால் ஒரு கவிதை எழுத முடியவில்லை

ஏதேதுக்கோ எழுதுகின்றாய் என

நீ கோபிப்பாய்

மயிலை எடுத்துக்கொண்டு

மணலாற்றிலோ

மண் கிண்டிமலையிலோ

கொக்கட்டிச்சோலையிலோ

நீ போய் அமர்ந்துவிட்டால்

உன் கோபம் ஆற்றமுடியாது என்பதால்

தேரேறும் கிளிநொச்சி கந்தா

இழந்தாலும் இன்னும் இளந்தாரி மிடுக்கே

வடம் பிடிக்க நான் வரமாட்டேன்

ஒப்புக்கு வந்து உன் பின்னே

கைகூப்ப என்னால் முடியாது

நல்லையில் என் மூத்த அண்ணன் திலீபன்

பசியிருந்த நாள்தான் என்னோடு

பக்கத்திலே சுற்றுகின்றது.

உன் திருவடியில் உருகி முடிந்த

அந்த உன்னதமானவனின் கனவு

இன்னும் ஒன்றும் நிறைவேறவில்லை

உன்னைப்போலவே அவனும் எளிமையானவன்

மக்களுக்காய் கந்தலை உடுக்க தயங்கான்

அவனை எழுதும்போது என்னை மீறும் கண்ணீர்

அப்பிடியொரு பிள்ளையை எம் தாய் ஈன்றாளே

கந்தசட்டிக்கவசம் போல

எத்தனைமுறை அவனை நினைத்தாலும்

அன்றவன் மெல்ல மெல்ல வாடிய வதனம்

நெஞ்சுக்குள் கிடந்த நெருடுகிறது அப்பனே

உன்னைபாடும் என் கவிதை

இந்த மண்ணை நேசித்த அந்த மகா தியாகியை

ஒருபோதும் பாட மறக்காது

அவன்தான் மகாத்மா

கண்ணை மூடிக்கொண்டு அந்த இளவலின்

உருவத்தை பார்த்தால்

எல்லா முனிபுங்குவரும் ஒன்றாய் திரண்ட

உற்பவம் தெரியும்

சின்ன வயதில் அவன் செய்த

சாவுக்கான தவத்தை கண்டு

இந்த உலகம் அதிர்ந்தபோதும்

அடக்கிக்கொண்டது

ஆங்காங்கு கிடந்த மன வக்கிரங்கள்

என் அண்ணணை ஆயிரம் சூரியனுக்கு நிகரென

ஆமோதிக்கவில்லை

இன்றுவரை தொடரும் சுயநலன்கள் சூத்திரங்கள்

பலாலிவரை வந்த ஆஞ்சநேயர் பார்தசாரதி

நல்லூர் வீதிக்கு வந்திருந்தால்

சில வேளை எங்கள் வல்லமை திலீபனின்

வயிற்று நெருப்பை அணைத்து

நதி போன்ற அவன் பயணத்தை பார்த்து சிலிர்திருப்போம்

ஏதும் நடக்கவில்லை

கந்தா உனக்கென்ன கவலையென்று

உன்னை ஊறுபடுத்த என் மனச்சாட்சி ஒப்பா

ஆதலால் தேரேறு

நீயுமொரு அகதிக்கடவுள் தான்

பலமுறை இடம்பெயர்ந்தாய்

உன் பதி பலமுறை இடிந்தது

வட்டுக்கோட்டை தீர்மானம் தொட்டு

கடைசி முள்ளிவாய்க்கால்வரை

தொடர்ந்து கஸ்டப்பட்டவர்களில் நீரும் அடக்கம்

பாலும்அறுகும் பவளச்செவ்வாயிற் குமுண் சிரிப்புமற்று

வெறிச்சோடிக்கிடந்தது உன் சந்நிதி பல முறை

கிளிநொச்சி கந்தன் ஆதலால்

தேவசேனாதிபதியாகவே எப்பொழுதும்

இருக்க வேண்டியிருந்தது

குடும்பம் ஒன்று உங்களுக்கு

மனையாள் இரண்டுடன் உள்ளதென்று

வள்ளியாரும் தெய்வானையாரும்

உம் மேல் ஊடல் கொண்டதுண்டு

புலிகளின் தலைமைத்துறைகள்

பரவிப்பாஞ்சானில் பக்கத்துவீடு உன்னுடையது

உனக்கும் நித்திரை இல்லைத்தான்

புட்பக விமானங்கள் வருவதும்

பூனைக்கண்கள் கைலுக்குவதும்

தமிழ்ச்செல்வன் உதடு நிறையச்சிரிப்பதும்

பாலா அண்ணன் வருவதும்

ஒரே பரபரப்பாய் இருப்பதும்

பிரபாகரன் எப்போதாவது வருவதும்

உம் வள்ளி தெய்வானை எட்டிப்பார்ப்பதும் என்று

தமிழ்க்கடவுள் நீர் பக்கத்தில் இருந்துகொண்டு

என்ன நினைத்தீர் சொல்வீரா அப்பனே!

முள்ளிவாய்க்காலை முற்கூட்டியே அறிந்தீரா

எல்லாரும் வந்து வந்து

ஏமாற்றப்போகிறார்கள் என்பதை

உம் நாட்குறிப்பில் எழுதியுள்ளீரா

வேலனே வேலேந்திய எங்கள் வண்ணமே

சொல்லும் தேரிழுக்கும் போது

எப்பொழுதும் பழைய தோத்திரங்கள் அல்லாமல்

இனி

எங்கள் தாகங்கள் ஏக்கங்கள் ஈகங்கள் பயணங்கள் துன்பங்கள் 

எல்லாம் கலந்து புதிய பஜனைகள் பாடவேண்டும்

இல்லையெனில்

நீ பரவிப்பாஞ்சான் அருகில் எழுந்தாய்

என்றன்றி பழமுதிர்ச்சோலையில் இங்கிருந்தாயென மாற்றிவிடுவர்

அப்பனே அழகா

இப்பொழுதான் புத்தகங்கள் எழுதலாம்

கமால் குணரட்ணவும் எழுதியுள்ளார்

எங்கள் பங்குக்கு ஒரு காவியத்தை தீட்டவேண்டாமா

சொல்லும் கச்சியப்பராய் மாறுகிறேன்

உன் அண்ணன் வியாசரிடம் கொடுத்த தந்தத்தை

எடுத்து வருகிறேன்

பித்தா பிறைசூடி என்று மாணிக்கவாசகனுக்கு

மணவறையில்

என் அப்பன் அடி எடுத்துக்கொடுத்ததுபோல்

எனக்கும் தொடக்கம் தா

தொடங்கலாம் திலீபனின் இந்த நாளில்

உன் தேரிலேயே வைத்து........

கோவணத்தோடு நாம் நின்றாலும்

உனக்கொரு கோபுரம் கட்டியுள்ளோம்

எங்கள் தீவிரம் தெரியும் உனக்கென்று நினைக்கிறேன்!

-பொன்.காந்தன்-