அழிவிலிருந்து மீட்கப்பட வேண்டிய பொம்மலாட்டம்

மரத்தால் செய்யப்பட்ட பொம்மைகளில் நூலைக் கட்டி திரைக்குப் பின்னால் இருந்து இயக்கியபடி கதை சொல்லும் கலை வடிவமே பொம்மலாட்டம். நாகரீக யுகத்தில், சினிமா, இணையம் போன்ற புதிய பொழுதுபோக்குக் கலை வடிவங்களின் அசுர வளர்ச்சியில், நலிந்து வரும் இக்கலை, தமிழகத்தின் மிகத்தொன்மையான பாரம்பரிய கலைகளில் ஒன்றாகும். 

தமிழ் இலக்கியப் பதிவுகளில் கூட பொம்மலாட்டத்தைப் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. கைகளால் சுமந்து இயக்குவதற்கு ஏதுவாக, எடைகுறைவான கல்யாண முருங்கை மரங்களால் செய்யப்படும் பொம்மைகளை, நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களுக்கெல்லாம் பாதுகாப்பாக கொண்டு செல்வதே கடினமான விஷயமாகும் என்கிறார்கள் பொம்மலாட்ட கலைஞர்கள். 

கிராபிக்ஸ், அனிமேஷன் தொழில்நுட்பங்கள் வரும் முன்னர் மக்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது இந்தக் கலை. 

இது குறித்து பொம்மலாட்டக் கலைஞர் கார்த்தி, “மக்கள் புதிதான விஷயங்களை விரும்புகிறார்கள், ரசிக்கிறார்கள். நாங்கள் பொதுவாக வள்ளித் திருமணம், பக்த பிரகலாதன் மற்றும் சீதா கல்யாணம் போன்றவற்றை நிகழ்த்துகிறோம். 

இன்றைய மக்கள் சினிமா பாடல்களை பொம்மலாட்டத்தில் கொண்டு வருவதை விரும்புகிறார்கள். இந்த தலைமுறையினருக்கு ஏற்றபடி சில மாற்றங்களை செய்தால் இந்தக் கலையை அழியாமல் பாதுகாக்கலாம்” என்று தெரிவித்திருக்கிறார்.