தேர்த் திருவிழாவிற்குச் சென்ற வேளை வீடுடைத்து பெறுமதியான பொருட்களைச் சுருட்டிச் சென்ற திருடர்கள்

வீட்டிலுள்ள அனைவரும் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் தேர்த் திருவிழாவிற்குச் சென்ற வேளை வீடுடைத்துப் பெறுமதியான பொருட்களைச் சுருட்டிச் சென்ற சம்பவம் கடந்த  திங்கட்கிழமை(12) தெல்லிப்பழை துர்க்காபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 

வீட்டிலுள்ள அனைவரும் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழாவிற்குச் சென்ற வேளை வீட்டின் முன்கதவினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த பெறுமதியான நகை மற்றும் புகைப்படக் கருவி என்பவற்றைக் கொள்ளையிட்ட பின்னர் அப் பகுதியிலிருந்து மெல்ல நழுவியுள்ளனர். 

ஆலயத்திற்குச் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிய வீட்டுக் காரர்கள் வீட்டின் முன் கதவு திறக்கப்பட்டிருப்பதையும், வீட்டினுள்ளே பொருட்கள் சிதறுண்டு கிடப்பதையும் அவதானித்து அதிர்ச்சியடைந்துள்ளனர். 

இதனையடுத்துச் சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர்கள் தெல்லிப்பழைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்துத்  தெல்லிப்பழைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.