மாசு படுத்தப்படும் நிலத்தடி நீர் குறித்து முதலமைச்சர் எச்சரிக்கை

யாழ் மாவட்டத்திலும், பச்சிலைப்பள்ளி பிரதேசத்திலும் நீர்ப்பாசன குளங்கள் அரிது. ஆதலால் இந்தப்பகுதி மக்கள் தோட்டக்கிணறுகளின் மூலமாகவே விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இவர்கள் மிக நீண்ட காலமாக சிறிய மற்றும் நடுத்தர விவசாய செய்கைகளில் ஈடுபட்டு வருகின்ற போதிலும், அண்மைக்காலமாக நிலத்தடி நீர் மாசு படுத்தப்படுதல் தொடர்பான பிரச்சினை பூதாகரமாக கிளம்பி இங்குள்ள மக்களை பெரும் குழப்பத்திற்கு உள்ளாக்கியுள்ளது. 

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட நீர் மாசடைவது பற்றிய ஆராய்ச்சியின் போது அளவுக்கதிகமான பசளை, கிருமி நாசினி போன்றவற்றின் நச்சு இரசாயனக்கலவைகள் நீருடன் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இங்குள்ள விவசாயக்கிணறுகள் பலவும் யுத்தம் காரணமாக அழிவடைந்து அவற்றின் மேற்சுற்று கட்டுகள், கிணற்றின் ஏனைய பகுதிகள் சிதைவடைந்த நிலையில் உள்ளதால் மாரி மழைக்காலங்களில் இந்த கிணறுகளை சுற்றியுள்ள விவசாய நிலங்களின் ஊடாக பாய்ந்தோடுகின்ற மழைநீர் அந்த நிலங்களில் காணப்படும் உரக்கலவைகளையும் அள்ளிக்கொண்டு சென்று இவ்வாறான கிணறுகளில் நேரடியாக சேர்த்து விடுவதால் இதன் மூலமாகவும் நிலத்தடி நீர் மாசுக்கள் நிரம்பியதாக மாற்றப்படுகின்றது. 

எனவே நிலத்தடி நீரை பயன்படுத்தும் போது மிகவும் அவதானமாக குறைந்த அளவு நீர்ப்பாவனையுடன் கூடிய அறுவடையை பெறக்கூடிய விதத்தில் விவசாய நடவடிக்கைகள் அமைதல் வேண்டும். நீர்த்தூறல் அமைப்பு மற்றும் சொட்டுநீர் விவசாய முறைகளை பயன்படுத்துவதன் மூலம் மீண்டும் எமது மக்கள் சுத்தமான நீரை தமது கிணறுகளில் இருந்து பெற உதவிசெய்ய வேண்டும் என்று விவசாய பெருமக்களிடம் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.