வேலூர் சிறையில் தாக்கப்பட்டார் பேரறிவாளன்

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள பேரறிவாளன் மீது சக கைதி ஒருவர் தாக்குதல் நடத்தியிருப்பது சிறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் உயர் பாதுகாப்பு பகுதியில் தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இன்று காலை வழக்கம் போல தனது பணிகளை மேற்கொண்டிருந்த பேரறிவாளனை சக கைதிகளில் ஒருவரான ராஜேஷ் கண்ணா என்பவர் இரும்பு கம்பியால் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் பேரறிவாளனுக்கு கை மற்றும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. 

சத்தம் கேட்டு அங்கு வந்த சிறை காவலர்கள் பேரறிவாளனை மீட்டு சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த தாக்குதலில் பேரறிவாளன் கையில் காயம் ஏற்பட்டு ரத்தப்போக்கு ஏற்பட்டதாகவும், அதனால் அவருக்கு தையல் போடப்பட்டிருப்பதாகவும் சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பேரறிவாளனை சக கைதி ராஜேஷ் என்பவர் எதற்காக தாக்கினார்? இருவருக்குமிடையே ஏதேனும் வாக்குவாதம் நடந்ததா என்பது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். ராஜேஷ் கண்ணா கொலை மற்றும் ஆள் கடத்தல் குற்றத்திற்காக ஆயுள் தண்டனை பெற்றவர் என சொல்லப்படுகிறது.

பேரறிவாளனுக்கு ஏற்கனவே சிறுநீரக தொற்று பிரச்னை இருப்பதால் அதற்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்நிலையில் இத்தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த பேரறிவாளனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து தகவல் அறிந்த அற்புதம்மாள் வேலூர் சிறைக்கு விரைந்துள்ளார்.

இது குறித்து வேலூர் மத்திய சிறை அதிகாரிகளிடம் கேட்டபோது " ராஜேஷ் தாக்கியதில் பேரறிவாளனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. பேரறிவாளன் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில் ராஜேஷ்க்கு எந்த காயமும் இல்லை. இருவரிடமும் விசாரணை நடத்தி வருகிறோம்." என்றார்.