மாணவர்களின் கல்விக்குப் பங்கமேற்படுகின்ற அரசியல் சக்திகளின் தலையீடு தவிர்க்கப்பட வேண்டும்

ஆசியாவின் முதலாவது பெண்கள் பாடசாலை என்ற பெருமையை தன்னகத்தே கொண்டதான உடுவில் மகளிர் கல்லூரியில் தற்போது இடம்பெற்று வருகின்ற சம்பவங்கள் மிகவும் மனவேதனையைத் தருகின்றன. உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு நியாயம் கிடைக்க அனைத்துத் தரப்பினரும் அணி திரண்டு நியாயத்திற்காகக் குரல் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு மாணவர்களின் கல்வி எதிர்காலத்தைப் பாதிக்கின்ற வகையிலும், அவர்களின் ஆளுமை விருத்திக்குப் பங்கமேற்படுகின்ற விதமாகவும் மத நிறுவனங்களினதோ, அரசியல் சக்திகளினதோ தலையீடு அமைதல் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் கேட்டுள்ளது.  

இது தொடர்பில் சமூக நீதிக்கான அமைப்பு  விடுத்துள்ள  ஊடக அறிக்கையொன்றை ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

இப்பாடசாலையின் மாணவர்களினதும், பெற்றோர் நலன்விரும்பிகளினதும், பழைய மாணவர்களினதும் கோரிக்கைகள் நியாயமானவையும், கருத்தில் எடுக்கப்பட்டு சரியான முறையில் தீர்வு காணப்பட வேண்டியவையுமாகும். 

ஆனால், அமைதியான முறையில் தமது கோரிக்கைகளை முன்வைத்துக் கவனயீர்ப்பில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான மாணவிகளை மிரட்டியும், உதாசீனப்படுத்தியும், அவர்கள் மீது வன்முறையைப் பாவிக்க முற்பட்டமை கண்டிக்கத்தக்கதும், தவிர்க்கப்பட  வேண்டியதுமாகும். பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நீதி கிடைக்கச் செய்வது சமூக அக்கறையுள்ள அனைவரினதும் தார்மீகக் கடமையாகும்.

அத்துடன் மாணவர்களின் கல்வி எதிர்காலத்தைப் பாதிக்கின்ற வகையிலும், அவர்களின் ஆளுமை விருத்திக்குப் பங்கமேற்படுகின்ற விதமாகவும் மத நிறுவனங்களினதோ, அரசியல் சக்திகளினதோ தலையீடு அமைதல் தவிர்க்கப்பட வேண்டும்.

எனவே, இவ் விவகாரத்தில் பாடசாலையில் அக்கறையுள்ள அனைத்து தரப்பினரும் அணிதிரண்டு நியாயத்திற்காகக் குரல்கொடுக்கவேண்டும் என சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.